சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு யோசனை உள்ளவர்கள் நேரடியாக அதைத் தெரிவிக்கலாம்.
நிலப் போக்குவரத்து ஆணையம் தனது பெருந்திட்டத்தைப் புதுப்பிப்பதற்காக நாடளாவிய கருத்து திரட்டும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டம் ஓராண்டுக்கு நீடிக்கும்.
தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், ‘அவர் தெம்பனிஸ்’ நடுவத்தில் ‘பரிவுமிக்க பயணிகள் வாரம் 2025’ஐத் தொடங்கிவைத்தபோது திட்டம் பற்றி அறிவித்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்துத் திரட்டு முயற்சியில் இதுவே ஆகப் பெரிய அளவிலானது என்ற திரு சியாவ், இன்னும் அதிகமான சிங்கப்பூரர்கள் ஆணையத்துடன் இணைந்து பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க முன்வருவார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.
ஆணையத்தின் பெருந்திட்டம் 2027ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூப்படையும் சமூகம், மாறிவரும் போக்குவரத்துப் பயன்பாடு ஆகியவற்றுக்குப் பெருந்திட்டத்தில் தீர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்துவரும் தேவைகளின் அடிப்படையில் எதற்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்பதில் கருத்துத் திரட்டு முயற்சி கவனம் செலுத்தும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவு, தானியக்க வாகனங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் தாக்கம் குறித்தும் சிங்கப்பூரர்களின் கருத்துகளைக் கண்டறிய ஆணையம் முற்படுகிறது.
பொதுப் போக்குவரத்து வாகனம் சார்ந்தது மட்டுமல்ல, அது மக்களையும் சமூகத்தையும் சார்ந்தது என்ற திரு சியாவ், பரிவுமிக்கப் போக்குவரத்துக் கலாசாரத்தை உருவாக்க மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது முக்கியம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
நிலப் போக்குவரத்து ஆணையம் நேரடியாகவும் இணையக் கலந்துரையாடல்கள் மூலமும் பொதுப் போக்குவரத்து குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்டறியவிருக்கிறது.
அதற்கென ஆணையம் எல்டிஎம்பி (LTMP) என்ற இணையப் பக்கத்தைத் தொடங்கியுள்ளது. நேரடிக் கலந்துரையாடல்களுக்கு இணையப் பக்கம் மூலம் பதிவுசெய்யலாம்.
பள்ளிக்கூடங்கள், சமூகக் குழுக்கள், நிறுவனப் பங்காளிகள், பிற பங்குதாரர்கள் ஆகியோரையும் ஆணையம் சந்திக்கவிருக்கிறது.
உரையாடல்கள், போட்டிகள், பிற நடவடிக்கைகள் மூலம் மக்களையும் சென்றடைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்குமுன் 2018ஆம் ஆண்டு ஆணையம் மக்களிடம் பொதுப் போக்குவரத்து பற்றி கருத்துத் திரட்டியது. அதில் 7,400க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் பங்கேற்றனர்.
அதன் அடிப்படையில் 2040ஆம் ஆண்டு பெருந்திட்டம் வடிமைக்கப்பட்டது.

