பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்வழி (BCEP), நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாண்டு நடுப்பகுதிக்குள் மொத்தம் 9 புதிய, நீட்டிக்கப்பட்ட சேவைகள் இத்திட்டத்தின்கீழ் அறிமுகம் செய்யப்படும்.
இச்சேவைகளால் ஏறத்தாழ 244,000 பயணிகளின் பயண நேரம் குறைவதுடன் தெரிவுகளும் அதிகரிக்கும்.
இதன் தொடர்பில் தெம்பனிஸ் நார்த் பேருந்து முனையத்தில் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) பேசிய போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், நகரப் பகுதிகளிலிருந்தும் எம்ஆர்டி (MRT) நிலையங்களிலிருந்தும் தொலைவாக உள்ள இடங்களிலுள்ள போக்குவரத்துக் கட்டமைப்பை முன்னேற்றுவது பிசிஇபி (BCEP) திட்டத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
புதிய குடியிருப்புகளில் எம்ஆர்டி நிலையங்களும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்களும் தற்போது கட்டப்பட்டு வருகையில், பேருந்துச் சேவையின் புதிய மேம்பாடுகள் உடனடித் தீர்வை வழங்குவதாகத் திரு சியாவ் குறிப்பிட்டார்.
இவ்வாண்டுக்கான அறிமுகங்களில் தெங்கா வட்டாரம் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுகிறது. குறிப்பாக, அங்குத் தொடங்கியுள்ள 831G/W சேவை, தெங்கா பேருந்து முனையத்திற்கும் தெங்கா கார்டன் அவென்யூவுக்கும் (Tengah Garden Avenue) இடையே வலம் வருகிறது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் அறிமுகம் காணவுள்ள சேவை எண் 460, தெம்பனிஸ் புலவார்ட் (Tampines Boulevard) வட்டாரவாசிகள் உச்ச நேரங்களில் தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையங்களுக்கு விரைவாகச் செல்ல வகைசெய்யும்.
அந்த வட்டாரத்திலுள்ள தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளைக் கொண்ட (BTO) புதிய குடியிருப்பின் தேவைகளை இந்தப் புதிய சேவை பூர்த்தி செய்யும் என்று அமைச்சர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில், குறிப்பாக ஹவ்காங், செங்காங், பொங்கோல் ஆகிய பகுதிகளில் வட்டாரவாசிகள், 457, 458, 459 ஆகிய மூன்று உச்சநேர சேவைகளை எதிர்பார்க்கலாம்.
ஈசூன் ஈஸ்டின் (Yishun East) 461 சேவை, காதிப் எம்ஆர்டி நிலையத்துடன் வட்டாரவாசிகளை இணைத்து பயண நேரத்தைக் குறைக்கிறது.
அத்துடன், நகரப் பகுதிக்கான புதிய நேரடிச் சேவையான 684, புக்கிட் பாத்தோக் வெஸ்ட், பிரிக்லண்ட் (Brickland) ஆகிய பகுதிகளை மத்திய வர்த்தக வட்டாரத்துடன் நேரடியாக இணைக்கும்.
பேருந்துக் கட்டமைப்புப் பரப்பளவு, பயணிகளின் போக்கு ஆகியவற்றின் மறுஆய்வுக்கு அடுத்து அடித்தள அமைப்புகளின் ஆலோசகர்களுடனும் (Grassroots Advisers) சமூகத் தலைவர்களுடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து மேம்பாடுகள் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

