நிலப் போக்குவரத்து ஆணையம், முக்கியப் போக்குவரத்து முனையங்களில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள சைக்கிள்களை அகற்றிவருவதாகத் தெரிவித்துள்ளது. சைக்கிள் நிறுத்துமிடங்களில் சரியாக நிறுத்தப்படாத சைக்கிள்களையும் ஆணையம் அப்புறப்படுத்துகிறது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து வெவ்வேறு வட்டாரங்களில் உள்ள சைக்கிள் நிறுத்துமிடங்களிலிருந்து 186 சைக்கிள்களையும் பிற நடமாட்டச் சாதனங்களையும் ஆணையம் நீக்கியுள்ளதாக அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை (ஜூன் 29) பதிவிட்டது.
ஈசூன், பாய லேபார், செங்காங் ஈஸ்ட் போன்ற வட்டாரங்கள் அவற்றுள் அடங்கும்.
சிங்கப்பூரில் உள்ள சைக்கிள் நிறுத்துமிடங்களை இன்னும் சரிவர நிர்வகிக்கும் நோக்கில், அங்குக் காணப்படும் புறக்கணிக்கப்பட்ட சைக்கிள்கள் அகற்றப்படுவதாக ஆணையம் சொன்னது.
அத்துடன், அத்தகைய இடங்களில் பிற சைக்கிள்களை நிறுத்துவதற்குக் கூடுதல் இட வசதியை ஏற்படுத்தவும் பயன்படுத்தாத நிலையில் உள்ள சைக்கிள்கள் நீக்கப்படுகின்றன.
புறக்கணிக்கப்பட்ட சைக்கிள்களைப் பறிமுதல் செய்ய அமலாக்கக் குழுக்கள் தொடர்ந்து தீவெங்கும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்ற ஆணையம், கைவிடப்பட்ட சைக்கிள்களிலும் சரிவர நிறுத்தப்படாத சைக்கிள்களிலும் சிவப்பு காகிதத்தில் அறிவிப்புகள் வைக்கப்படும் என்றது.
குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நீக்கப்படாத சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படும்.
பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் சைக்கிளோட்டிகள் உரிய இடங்களில் தங்கள் சைக்கிள்களை நிறுத்திவைக்கும்படி ஆணையம் நினைவூட்டியது.

