நிலப் போக்குவரத்து ஆணையம், கார்கள் வகைப்படுத்தப்படும் விதத்தை மேம்படுத்த வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) முறையை மறுஆய்வு செய்கிறது.
நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் அதனை அறிவித்தார். ‘சிஓஇ’ முறையை மறுஆய்வு செய்யும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டிருந்தனர்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற இரண்டாவது குத்தகை ஏலத்தில், சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘ஏ’ பிரிவு) ‘சிஓஇ’ கட்டணம், பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘பி’ பிரிவு) ‘சிஓஇ’ கட்டணத்தைவிட அதிகமாக இருந்ததை ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியாவும் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங்கும் குறிப்பிட்டிருந்தனர்.
‘சிஓஇ’ முறையின் மறுஆய்வுக்காக, பொதுமக்களிடமிருந்தும் வாகனத் துறையிடமிருந்தும் நிலப் போக்குவரத்து ஆணையம் கருத்துகளை நாடும் என்று திரு சியாவ் கூறினார்.
‘ஏ பிரிவுக்கான ‘சிஓஇ’ சான்றிதழ்களின் எண்ணிக்கை 2025ல் கூடியதாலும் ‘பி’ பிரிவுக்கான சான்றிதழ்கள் இவ்வாண்டு தொடர்ந்து அதிகரிக்கும் என்பதாலும் இரண்டு பிரிவுகளுக்குமான கட்டணங்கள் சிறிது காலத்திற்கு ஒரே நிலையில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக திரு சியாவ் சொன்னார்.

