சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் சென்றிருந்த பலருக்கு ‘நிலப்போக்குவரத்து ஆணையம்’ என்ற பெயரில் செலுத்தப்படாத போக்குவரத்துக் கட்டணங்கள் குறித்து மோசடியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, $24,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைக் காவல்துறை புதன்கிழமை (பிப்ரவரி 10) அறிவித்துள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளில், செலுத்தப்படாத கட்டணங்களை உடனடியாகச் செலுத்துமாறு கோரப்படும். அந்த இணைப்பை (link) அவர்கள் கிளிக் செய்யும் போது, அது ஒரு போலி இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லும்.
அங்கு அவர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்கள் பெறப்பட்டு, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சிறிய தொகைக்குப் பதிலாக ஆயிரக்கணக்கில் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆணையம் பயன்பாட்டில் இருந்து நீக்கிய பழைய அதிகாரபூர்வ குறுஞ்செய்தி ஒன்றினைக் கொண்டு போலியாக தற்போதைய செய்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 10 பேர் இவ்வகையான மோசடிகள் தொடர்பில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று காவல்துறை கூறியுள்ளது. கைப்பேசி பயனாளர்கள், இவைபோன்ற கட்டணங்கள் குறித்த குறுஞ்செய்திகளைத் தவிர்த்து தனிப்பட்ட விவரங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அரசாங்க அமைப்புகளிடம் இருந்து வரக்கூடிய gov.sg என்று முடியும் அதிகாரபூர்வ குறுஞ்செய்திகள் கட்டணங்கள் வசூலிக்க அறவே பயன்படுத்தப்படாது என்று காவல்துறை வலியுறுத்தியது.
போக்குவரத்து சார்ந்த கட்டணங்களுக்கு One Motoring website இணையப்பக்கத்தை நாடும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சிங்கப்பூர் வானொலி படைப்பாளர் காவ் யிஷின், இதே மோசடியில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார். அவருக்கு வந்த குறுஞ்செய்தியில் $3.50க்கான ‘நிலுவை’யில் இருந்த போக்குவரத்து கட்டணத்தைச் செலுத்த முயன்றபோது கட்டண அட்டையில் $23,000க்கான தொகை காட்டப்பட்டு அவர் உடனே பரிவர்த்தனையை ரத்து செய்து மோசடி என்பதை உணர்ந்துள்ளார்.

