தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மொழி, உணர்வு, இசை சங்கமித்த ‘கவிப்பெருக்கு’

3 mins read
b1660092-582c-4aaa-bbce-7109e219222c
மேடையில் கவிதைகள் வாசித்த கவிஞர்களும் மாணவர்களும். - படம்: பிரேம்ஸ்டார்ஸ் புரொடக்‌ஷன்ஸ்

வெவ்வேறு தலைப்புகளில் தாங்கள் படைத்த கவிதைகளை உணர்ச்சி பொங்க இசையுடன் கோத்துப் படைத்த மாறுபட்ட தமிழ்க் கவிதைப் பேச்சு நிகழ்ச்சியான ‘கவிப்பெருக்கு’ கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) நடந்தேறியது. எட்டுக் கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதைகளை நயம்பட மேடையில் படைத்தனர்.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக எஸ்பிளனேட் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் பெருவரவேற்பைப் பெற்றது.

இந்தக் கவிப்பெருக்கு நிகழ்ச்சி, ஆங்கிலத்தின் ‘ஸ்போக்கன் வோர்ட் பொயெட்ரி’ (Spoken word poetry) வடிவத்தைத் தமிழில் படைக்கும் முயற்சி என்றும் இது சமகாலக் கலைவடிவத்தில் தமிழை உயர்த்தி எடுத்துச்செல்லும் நோக்கில் நடத்தப்படுகிறது என்றும் சொன்னார் கவிப்பெருக்கு குழுவின் நிறுவனர் இராஜேஷ் குமார் தர்மலிங்கம்.

சிறப்பாகக் கவி படைத்த கவிஞர்களையும் மாணவர்களையும் வாழ்த்திப் பேசினார் தேசிய நூலக வாரி­யத் தமிழ்மொழிச் சேவைகள் பிரி­வுத் தலை­வர் து.அழ­கிய பாண்­டி­யன்.
சிறப்பாகக் கவி படைத்த கவிஞர்களையும் மாணவர்களையும் வாழ்த்திப் பேசினார் தேசிய நூலக வாரி­யத் தமிழ்மொழிச் சேவைகள் பிரி­வுத் தலை­வர் து.அழ­கிய பாண்­டி­யன். - படம்: பிரேம்ஸ்டார்ஸ் புரொடக்‌ஷன்ஸ்

“வெட்டிக் குவிப்பதில் இல்லை உங்கள் மறம், மரங்களை நட்டுக் குவிப்பதில்தான்” என்று மரம் நடுதலின் அவசியத்தைக் குறித்து மரமே பேசுவதாகக் கவி படைத்தார் கணேஷ் நாராயணன். ‘மறத்தமிழர்கள் மரத்தமிழர்கள்’ உள்ளிட்ட சொல் விளையாட்டுகள் நிறைந்த கவிதையைப் புன்னகையுடன் அவர் வாசிக்க அரங்கம் அதிர்ந்தது.

எது செல்வம், எது வாழ்வின் தேடல் போன்ற கேள்விகளுக்குப் பதிலாக ‘மகிழ்ச்சியினைத் தேடுங்கள்’ எனும் தலைப்பில் கவிதை வாசித்தார் இராஜேஷ் குமார் தர்மலிங்கம். இயல்பாக தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் அன்றாட வாழ்வியல் சூழலைச் சற்றே நகைச்சுவை கலந்து படைத்ததைப் பார்வையாளர்கள் பெரிதும் ரசித்ததைக் காண முடிந்தது

கவிதையைக் காதலியாக்கி, அவள் படும் பாட்டை அழகுறப் படைத்தார் சபா. முத்து நடராசன். ‘நிலவு ஒரு பெண்ணாக வேண்டும்’ எனும் கருத்துடன் மோதி, பெண் விடுதலை பேசும் கவிதையைப் படைத்தார் விஷ்ருதா நந்தகுமார்.

தந்தைக்கும் மகளுக்குமான உறவை வெளிக்காட்டும் கவிதை வாசித்தார் அழகப்பன் மெய்யப்பன். ‘அப்பாவின் தாலாட்டு’ எனும் அக்கவிதை மகளைத் தூங்க வைக்க தந்தை படும் பாட்டையும், தூங்கும்போது அவள் மனத்தைப் பக்குவப்படுத்த அவர் சொல்லும் கருத்துகளையும் பேசுமாறு அவர் வாசித்த கவிதை அரங்கைக் கட்டிப்போட்டது.

‘நீ... நான்... நிஜம்!’ எனும் தலைப்பில் அடையாளத்தைத் தேடும் வினாவிற்கு உண்மையான விடையைத் தேடும் ஒரு பயணத்தைக் கவிதையாகப் படைத்தார் வெண்ணிலா அசோகன். ‘மூன்று எழுத்து பித்தா’ எனும் ஒரு பெயரில்லாதவரைப் பற்றிய கவிதை படைத்தார் தமீம் அன்சாரி.

தொடர்ந்து அவர் படைத்த ‘விரயத்தின் கிரயம்’ எனும் கவிதையை மாணவர்கள் சஸ்வின் பிரசாத், ஹரிவர்த்னி மோகன், வைஷ்ணவி கண்ணன், பிரபவ் சுந்தரவடிவேல் ஆகியோர் வாசித்தனர். மனிதர்கள் இயற்கையின் கொடைகளை எவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும், அவர்களின் வீணான போக்குகளையும் சுட்டிக்காட்டும் விதமாக அமைந்த கவிதை பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

இறுதியாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் தலைப்பில் இராஜேஷ் குமார் தர்மலிங்கம், வெண்ணிலா அசோகன், கணேஷ் நாராயணன் இயற்றிய கவிதையினை மாணவர்கள் ஸ்ருதிகா குமார், வர்ஷிகா கண்ணன், அக்‌ஷயா ரா.சி., இலக்கியா எழிலி கருணாகரன் ஆகியோர் வாசித்தனர். உலகில் போர் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பேருணர்ச்சியுடன் வெளிப்படுத்திய அக்கவிதை பார்வையாளர்களிடமும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.

போர்குறித்து மாணவர்கள் படைத்த கவிதையும், மரம்குறித்த கவிதையும் தன் மனத்தில் நீங்கா இடம்பிடித்துவிட்டதாகக் குறிப்பிட்டார் உட்லண்ட்ஸ் பகுதியிலிருந்து வந்த மணியரசி மோகன், 36.

“கவிதை வாசிக்கப்பட்ட முறை, உச்சரிப்பு ஆகியவற்றை ரசித்தேன். இளம் மாணவர்கள் அழகாகத் தமிழ் வாசிப்பதைப் பார்த்ததில் மகிழ்ச்சி,” என்றார் பாய லேபார் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 60.

“ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்பட்ட சிந்தனையின் ஆழமும் கருத்துருவாக்கமும் வியக்க வைத்தது. இளையர்கள் உணர்ச்சி பொங்க பார்வையாளர்கள் முன் தமிழ்க் கவிதை வாசிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.

குறிப்புச் சொற்கள்