சிங்கப்பூரின் அரசாங்கக் கணக்குகளைக் கண்காணிக்கும் அலுவலகம் பல்வேறு அரசாங்க அமைப்புகளில் குறைபாடுகள் நிகழ்ந்துள்ளதை தனது ஆக அண்மைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
வீவக வீடமைப்பு மானியம் வழங்குவதிலும் புதிய சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் மையத்தின் மேம்பாடு தொடர்பிலான நிதி விவகாரங்களிலும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் (ஏஜிஓ) குறைகளைக் கண்டறிந்தது.
2025-2026ஆம் நிதி ஆண்டிற்காக 16 அமைச்சுகள், எட்டு அரசாங்க அமைப்புகளுடன் மூன்று சட்டரீதியான கழகங்கள், அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்கள், இதர இரண்டு கணக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசு நிதி அறிக்கைகளை ஏஜிஓ தணிக்கை செய்தது.
அதன் விவரங்களை புதன்கிழமை (ஜூலை 15) அது வெளியிட்டது.
ஏஜிஓ தனது தணிக்கை அறிக்கையை ஜூலை 2ஆம் தேதி அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் சமர்ப்பித்த பின்னர் ஜூலை 14ஆம் தேதி நாடாளுமன்றத்திடம் அளித்தது.
பல்வேறு அமைச்சுகள் மற்றும் சட்டரீதியான கழகங்களின் ஏலக்குத்தகை, செயல்பாடுகள் மற்றும் வருவாயை நிர்வகித்ததில் உள்ள குறைபாடுகளையும் ஆவணங்களில் சாத்தியமான முறைகேடுகளையும் அது தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், ஏஜிஓ கண்டறிந்த குறைபாடுகளை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாகவும் அவற்றைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறைபாடுகள் கண்டறியப்படும்போது, சம்பந்தப்பட்ட அமைப்புகள் அவற்றின் மூலக் காரணங்களை முழுமையாக ஆராய்ந்து, உடனடியாகச் சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
கூடுதலாக வழங்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுதல், செயல்முறைகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துதல், தேவைப்படும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் ஆகியன அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
“கணக்குத் தணிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் கண்டறியப்படும் எந்த ஒரு முறைகேட்டையும் அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது,” என்றது நிதி அமைச்சு.
“தணிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் கண்டறியப்படும் எந்தவொரு முறைகேட்டையும் அரசாங்கம் தீவிரமாகக் கருதுகிறது,” என்று அது கூறியது.
“ஆதாரம் இருக்கும் முறைகேடுகள் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு முறைகேடும் கடுமையாகக் கையாளப்படும். மேலும், அவற்றுடன் தொடர்புடையவர்கள்மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.
சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் மையத்திற்காக மேற்கொள்ளப்பட்ட $147.96 மில்லியன் சேமிப்பு நிதி பற்றி சுகாதார அமைச்சு அறிவிக்காததையும் ஏஜிஓ கண்டறிந்தது.
அதன் பின்னர், அந்த சேமிப்புத் தொகை மூலம் மூன்று திட்டங்களுக்கு அமைச்சு நிதியளித்ததும் அவற்றில் இரண்டு திட்டங்கள் முன்னதாகவே வளர்ச்சித் திட்டக் குழுவால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் தணிக்கையில் தெரியவந்தது.
குறிப்பிட்ட சில பணிகள் தொடங்கப்பட்ட அல்லது நிறைவடைந்த பின்னரே அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் சுகாதார அமைச்சில் முறையான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத $2.2 மில்லியன் இழப்பு மற்றும் செலவுத் தொகையும் கண்டறியப்பட்டன.
இதன் பின்னர் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நடப்பில் உள்ள மற்றும் வருங்காலத் திட்டங்கள் அனைத்திலும் கண்டிப்பு, சீரான போக்கு மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்வதற்காக அமைச்சும் எம்ஓஎச் ஹோல்டிங்சும் தங்களது நிர்வாக அமைப்புகளையும் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து வலுப்படுத்த இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

