சிங்கப்பூரில் தொழிற்பேட்டைக்கான பெரிய குளிரூட்டும் கட்டமைப்பு அங் மோ கியோவில் டெக்னோபார்க்கில் தொடங்கப்பட்டது.
புதிய கட்டமைப்பு குளிர் சார்ந்த நடவடிக்கைகளுக்காகச் செலவு செய்யப்படும் மின்சாரத்தை 20 விழுக்காடுவரை குறைக்கும். இதனால் ஆண்டுக்கு 500,000 கியூபிக் மீட்டர் நீர் மிச்சமாகும். மேலும் 120,000 டன் கரியமில வாயு வெளியேற்றமும் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 90,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள குளிரூட்டும் கட்டமைப்பு ஐந்து கட்டடங்களுக்குக் குளிர் நீரை அனுப்பும். அந்த ஐந்து கட்டடங்களில் எஸ்டிமைக்ரோஎலக்டிரானிக்ஸ் (STMicroelectronics) செயல்படுகிறது. பகுதி மின்கடத்திகளை அது உற்பத்தி செய்கிறது.
உட்லண்ட்ஸ், ஜூரோங், சாங்கி உள்ளிட்ட இடங்களிலும் தொழிற்பேட்டைக்கான குளிரூட்டும் கட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல் மத்திய வட்டாரம், மரினா பே, தெம்பனிஸ் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளிலும் குளிரூட்டும் கட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அங் மோ கியோவில் உள்ள குளிரூட்டும் கட்டமைப்புகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) செயல்படத் தொடங்கியது. அதன் திறப்பு நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் துணை மூத்த அமைச்சர் லோ யென் லிங் கலந்துகொண்டார்.
நிறுவனங்கள் குளிரூட்டும் கட்டமைப்புகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் நீடித்த நிலைத்தன்மை கொண்ட நடவடிக்கைகள், மின்வாகன மின்னூட்டம் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம் என்று மூத்த துணை அமைச்சர் லோ கேட்டுக்கொண்டார்.

