சிங்கப்பூர் ‘ஐலன்ட் கன்ட்ரி கிளப்’பிற்கு அருகில் உள்ள நடைப்பாதையில் பெரும்பள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அந்தப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இம்மாதம் 23ஆம் தேதி அந்தப் பெரும்பள்ளம் காணப்பட்டது.
தேசிய தண்ணீர் அமைப்பான பியுபி இம்மாதம் 24ஆம் தேதி அளித்த அறிக்கையில், மெக்ரிச்சி நீர்த்தேக்கப் பூங்காவில் ஏற்பட்ட 0.6 மீட்டர் அகலமும் 0.5 மீட்டர் ஆழமும் கொண்ட பெரும்பள்ளம் குறித்து அறிந்திருப்பதாகவும் அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தது.
பெரும்பள்ளம் மூடப்பட்டுவிட்டது என்றபோதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த வட்டாரம் தொடர்ந்து மூடப்படும் என்று அது சொன்னது.
அடுத்த சில நாள்களில் பாதிக்கப்பட்ட நிலமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஆராயப்படும்.
நீர்ப்பகுதிக்கு அருகில் பெரும்பள்ளத்தைக் காண்பிக்கும் புகைப்படத்தை சிங்கப்பூர் ‘வாய்ல்ட்லைஃப் சைட்டிங்க்ஸ்’ என்ற வனவிலங்கு ஆர்வலர் குழுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் காண முடிகிறது.
கருத்துப் பதிவிடும் பகுதியில் பயனீட்டாளர் ஒருவர் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்று கேட்டிருந்தார். மற்றொருவர் அப்பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் அந்தப் பெரும்பள்ளம் ஏற்பட்டதா என்று கேட்டார்.
பள்ளம் காரணமாக யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று பியுபு உறுதிப்படுத்தியது.
