கடந்த ஐந்தாண்டுகளில் புதிய 5-காசு நாணயங்கள் தயாரிக்கப்படவில்லை: துணைப் பிரதமர் கான்

கடந்த ஐந்தாண்டுகளில் புதிய 5-காசு நாணயங்கள் தயாரிக்கப்படவில்லை: துணைப் பிரதமர் கான்

2 mins read
5-காசு நாணயங்களைப் புழக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் திட்டம் ஏதுமில்லை என்றார்.
de830ec5-773c-4bef-91c2-9a51fe480d32
சிங்கப்பூர் நாணயச் சாலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய 5-காசு நாணயங்கள் தயாரிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது. - படம்: ஏஷியாஒன்

சிங்கப்பூர் நாணய ஆணையம் 5-காசு நாணயங்களைப் புழக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளத் திட்டமிடவில்லை என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியிருக்கிறார்.

பொதுமக்களிடையே அவற்றுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக இருப்பதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவருமான திரு கான், அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபௌஸி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.

திரு ஃபட்லி, ஒவ்வொரு 5-காசையும் தயாரிப்பதற்கு ஆகும் செலவு குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், நாணய மதிப்பைவிட அதைத் தயாரிக்கும் செலவு அதிகம் என்றால் அரசாங்கம் 5-காசு நாணயங்களை மீட்டுக்கொள்ளுமா என்றும் அவர் கேட்டிருந்தார்.

அதற்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் திரு கான், கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூர் நாணயச் சாலையில் புதிய 5-காசுகள் தயாரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். புதிய 5-காசுகளை இனியும் தயாரிக்கும் எண்ணம் சிங்கப்பூர் நாணய ஆணையத்துக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

5-காசு நாணயங்களைத் தயாரிக்க ஆகும் செலவு அதன் நாணய மதிப்பைவிடக் குறைவு என்றும் திரு கான் தெளிவுபடுத்தினார்.

“பேரங்காடிகள், விரைவு உணவகங்கள் போன்றவை சில பொருள்களுக்கான விலைகளை நிர்ணயிக்கும்போது 5-காசைப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. கடைகள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பைகளுக்கு 5 அல்லது 10 காசு வசூலிக்கின்றன,” என்றும் திரு கான் குறிப்பிட்டார்.

5-காசு நாணயங்களை மீட்டுக்கொண்டால் சில்லறை விற்பனையாளர்கள் பொருள்களின் விலையை மேலும் ஐந்து காசு கூட்டித் திருத்துவர்; அது வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் என்றார் அவர்.

ஆணையம், பயன்பாட்டுப் போக்கையும் 5-காசு நாணயத்திற்கான தேவையையும் தொடர்ந்து கண்காணித்து, நீண்டகால அடிப்படையில் இதன் தொடர்பில் முடிவெடுக்கும் என்றும் துணைப் பிரதமர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்