தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மழைக்காலத்திலும் லிட்டில் இந்தியாவில் பொங்கல் அமர்க்களம்

3 mins read
0527ab35-1cad-4244-a1a6-832d01c6b4d6
இடைவிடாது பெய்த மழையிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கடைசி நிமிட பொருள்கள் வாங்கும் மக்கள்.  - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 3

கட்டுக்கட்டாய்த் தித்திக்கும் கரும்பு, கொத்துக்கொத்தாய் மஞ்சள், இஞ்சி, அடுக்கடுக்காய் பானைகள், அலையலையாய் மக்கள் என லிட்டில் இந்தியா வட்டாரம் பொங்கலுக்கு முதல்நாள் அமர்க்களமாகக் காட்சியளித்தது. 

குறிப்பாக, பல நாள்கள் தொடர்ந்து கொட்டும் மழையையும் பாராமல் கடைசி நிமிட வியாபாரம் பரபரப்பாக கேம்பல் லேன், பஃப்ளோ சாலையில் நடந்துகொண்டிருந்தது. இருப்பினும், மழையால் சிலருக்கு பாதிப்பு இருக்கவே செய்ததாகச் சிலர் தெரிவித்தனர்.  

“கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வர்த்தகம் சுமார் 50% சரிந்துள்ளது. கனத்த மழை காரணமாக மக்கள் கூட்டம் சற்று குறைந்துள்ளது,” என்று ஜோதி புஷ்பக்கடையின் மேலாளர் அண்ணாதுரை தெரிவித்தார். 

“கரும்பு, மஞ்சள், இஞ்சிக்கொத்து, வாழை இலை போன்ற பொருள்களை நேரில் வாங்குவது சிறப்பு. மக்கள் அதன் தரம் பார்த்து வாங்குவதால் அதை இணையம்வழி விற்பது சற்று கடினம்,” என்றும் கூறினார். 

ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து கொட்டிய மழை பூக்கடைகளுக்கும் சாதகமாக அமையவில்லை.  

“மழையால் யாரும் லிட்டில் இந்தியா வட்டாரத்துக்கு வரவில்லை. வந்தாலும் வானிலையின் காரணமாக அவசர அவசரமாகப் போய்விடுகிறார்கள்,” என்றார் கல்யாணி பூக்கடையின்  உரிமையாளர் வனிதா. 

“கடந்த சில ஆண்டுகளாகப் பூக்கடைகள் அதிகரித்து வருவதால் பொங்கல் போன்ற நாள்களில் போட்டித்தன்மை அதிகரிக்கிறது. இதனால், லாபம் ஈட்டுவதும் சற்று சிரமம்,” என்றார் வனிதா. 

“தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. இனி வருவதை எதிர்பார்ப்போம்,” என்று புன்னகையோடு கூறினார் அவர். 

இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாது பொங்கல் திருநாளை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரத்துக்குப் பொருள்கள் வந்தாக வேண்டும் என்பதில் வாடிக்கையாளர்கள் பலர் உறுதியாக இருந்தனர். 

“லிட்டில் இந்தியாவில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் எளிதில் கிடைக்கின்றன. மழை பெய்தாலும் ஒரே இடத்தில் பொருள்கள் வாங்கும் வசதிக்கு லிட்டில் இந்தியா பகுதி சிறந்தது,” என்றார் வாடிக்கையாளர் லாவண்யா. 

பிற்பகல் மழை சற்று ஓய்ந்ததால் குடும்பத்துடன் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்க லிட்டில் இந்தியாவுக்கு அபிராமி-மாறன் தம்பதியர் வந்தனர். 

“வார இறுதி நாள்களுடன் ஒப்பிடுகையில் இன்று கூட்டம் சற்று குறைந்துதான் இருக்கிறது. மழையும் அதிகம் இல்லை என்பதால் இன்று பொருள்கள் வாங்க வந்தோம்,” என்று நேற்று (ஜனவரி 13) தெரிவித்தார் அபிராமி. 

மழை பெய்தாலும் பொங்கலை முன்னிட்டு காய்கறி வியாபாரத்துக்குத் தடையில்லை எனத் தெரிவித்தார் சாய் ஷண்முகா காய்கறிக் கடையில் பணிபுரியும் வெங்கடாச்சலம் சக்திவேல். 

“திங்கட்கிழமை என்பதால் இப்போது வியாபாரம் சற்று குறைந்துள்ளது. வேலை முடிந்த பிறகு மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்றார் வெங்கடாச்சலம். 

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிங்கப்பூரில் பணிபுரியும் சண்முகவேல், ‘யூடியூப்’ காணொளிகள் மூலம் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதைக் கற்றுக்கொண்டு தம் நண்பர்களுடன் பொங்கல் திருநாளை இனிதே வரவேற்பது வழக்கம். 

“இவ்வாண்டு இந்தியாவுக்குத் திரும்பி பொங்கல் கொண்டாட விடுப்பு தரப்படவில்லை. அதனால், என் நண்பர்களுடன் சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாடத் தயாராகிறேன்,” என்றார் சண்முகவேல். 

பொங்கலுக்குக் கரும்பு, காய், பழம் வாங்குவது வழக்கம்.

இருப்பினும் தம் பிள்ளைகளுக்குப் பொங்கல் தினத்துக்காகப் புத்தாடைகள் வாங்கினார் இல்லத்தரசி காயத்ரி ஞானசுப்பிரமணியன். 

“பிள்ளைகளுக்குப் புத்தாடைகளைத் தவிர இவ்வாண்டு சிறப்பாகப் பொங்கல் பானையைச் சித்திரிக்கும் கோலம் ஒன்று வரையப் போகிறேன்,” என்று கூறினார் காயத்ரி. 

மழைக்காலத்திலும் பொங்கல் திருநாளை வரவேற்கும் உற்சாகத்திற்குக் குறைவில்லை என்பதை களைகட்டியிருந்த லிட்டில் இந்தியாவை வலம்வந்தபோது உணர முடிந்தது.

குறிப்புச் சொற்கள்