தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடந்த ஆண்டு 20 வயதுக்கு கீழ் உள்ள 156 போதைப் புழங்கிகள் கைது

2 mins read
d999fb4f-15a8-4e88-9f76-12164cefa33a
2024ஆம் ஆண்டு மொத்தம் 3,119 பேர் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 20 வயதுக்கு கீழ் உள்ள 156 போதைப் புழங்கிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயது சிறுவனும் ஒருவர்.

கைது செய்யப்பட்டவர்களில் 126 பேர் புதிதாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.

2023ஆம் ஆண்டு 20 வயதுக்கு கீழ் உள்ள 97 போதைப் பழங்கிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது அந்த எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தத் தகவல்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புதன்கிழமை (பிப்ரவரி 12) வெளியிட்டது.

“உலக அளவில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மோசமாகி வருகிறது, அதனால் சிங்கப்பூர் இளையர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான ஆபத்துகளை சமூகமாக இணைந்து எடுத்துரைக்க வேண்டும்,” என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கேட்டுக்கொண்டது.

2024ஆம் ஆண்டு மொத்தம் 3,119 பேர் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

அது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு.

2023ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பில் 3,122 பேர் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும், 2024ஆம் ஆண்டு 966 பேர் புதிதாகப் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகினர். 2023ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 952.

மீண்டும் மீண்டும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை 2024ல் சற்று குறைந்துள்ளது. 2,153 பேர் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டனர்.

2023ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 2,170ஆக இருந்தது.

20 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது கவலை தரும் செய்தி என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும், கடந்த ஆண்டு புதிதாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையில் 50 விழுக்காட்டினர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அதுவும் கவலை தருகிறது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

புதிதாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களில் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 507 பேர்.

‘மெத்தம்பேட்டமைன்’ என்ற போதைப்பொருளை 20 வயதுக்கு கீழ் உள்ள இளையர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். 139 பேர் அதைப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி மூன்று பதின்மவயதுப் பெண்கள் மெத்தம்பேட்டமைன் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் இரு பெண்களின் வயது 13. மற்றொருவரின் வயது 14.

குறிப்புச் சொற்கள்