சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பெரிய அளவில் மின்சிகரெட்டுகள் கடத்தப்பட்ட 59 சம்பவங்களை அரசாங்க அமைப்புகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளன.
அந்தச் சம்பவங்களில் தொடர்புடைய 230,000 மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர, கடந்த ஈராண்டுகளில் மின்சிகரெட் விற்பனைக்காக இணையத்தில் வெளியிடப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட விளம்பரங்களை அரசாங்கம் நீக்கியுள்ளது.
அந்த விளம்பரங்களில் 99 விழுக்காடு வெளிநாட்டுத் தளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டவை.
மின்சிகரெட் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையும் மறுவாழ்வு ஏற்பாடுகளும் நடப்பில் உள்ள நிலையில், மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தியதற்காகவும் அவற்றை வைத்திருந்ததற்காகவும் கடந்த ஆண்டில் 3,534 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சுகாதார துணை அமைச்சர் ரஹயு மஹ்ஸம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) இந்தத் தகவல்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்சன் லாம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவற்றைக் கூறினார்.
எல்லை தாண்டி மின்சிகரெட் விநியோகம் நடைபெறுவதைத் தடுக்க சுகாதார அமைச்சு எவ்வாறு வெளிநாட்டுத் தளங்களுடனும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளுடனும் இணைந்து செயல்பட்டது என்று திரு லாம் கேட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சுகாதார அறிவியல் ஆணையமும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து 2025ஆம் ஆண்டு ஏறத்தாழ 230,000 மின்சிகரெட்டுகளையும் மின்சிகரெட் சாதனங்களையும் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்ததாக திருவாட்டி ரஹயு தமது பதிலில் குறிப்பிட்டார்.
மேலும், இணையத்தில் வெளியிடப்பட்ட மின்சிகரெட் விற்பனைப் பட்டியலை நீக்க இணைய வர்த்தகத் தளங்கள், சமூக ஊடகத் தளங்கள், தகவல் தளங்கள் போன்றவற்றுடன் இணைந்து சுகாதார அறிவியல் ஆணையம் பணியாற்றி வருகிறதென்றார் அவர்.
அதன் விளைவாக, ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், வீசாட், யூடியூப், டெலிகிராம் ஆகிய தளங்களில் வெளியிடப்பட்ட 99 விழுக்காட்டு விளம்பரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாக திருவாட்டி ரஹயு கூறினார்.
“மின்சிகரெட் குற்றங்களுக்கு எதிரான அமலாக்க முயற்சிகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
“சுகாதார அறிவியல் ஆணையம் அன்றாட அடிப்படையில் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதற்கான விவரங்கள் எங்களிடம் உள்ளன,” என்று அவர் தமது பதிலில் தெரிவித்தார்.

