2027 பிற்பாதியிலிருந்து, கடலில் அஸ்தியைக் கரைப்பதற்கான வாராந்தர படகுச் சேவைகள்

2027 பிற்பாதியிலிருந்து, கடலில் அஸ்தியைக் கரைப்பதற்கான வாராந்தர படகுச் சேவைகள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

12 Oct 2026 - 6:22 pm

2 mins read

தங்கள் அன்புக்குரியவர்களின் அஸ்தியைக் கடலில் கரைக்க விரும்பும் குடும்பங்களுக்கு, 2027ஆம் ஆண்டின் பிற்பாதியில் இருந்து ஒரு புதிய வாய்ப்பு கிடைக்கும். அப்போது, ​​தேசிய சுற்றுப்புற அமைப்பு (என்இஏ) ஒரு புதிய ஈராண்டு முன்னோடிப் படகுச் சேவையைத் தொடங்கும்.

அந்த அமைப்பால் நியமிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் கீழ், பாசிர் பாஞ்சாங் படகு முனையத்திலிருந்து இந்தச் சேவை வாரந்தோறும் இயக்கப்படும். மேலும், இது ஒரே படகில் பல குழுக்களை ஏற்றிச் செல்லும்.

ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் $50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இது, படகில் ஆறு குடும்ப உறுப்பினர்கள் வரை பயணம் மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த ‘என்இஏ’, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

தகனம் செய்யப்பட்டு சாம்பலாக்கப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அஸ்தியைக் கடலில் தூவுவதற்கான தேவை பெருகியுள்ளது. இதற்குத் தீர்வு காணும் விதமாகவே இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக என்இஏ, திங்கட்கிழமை (அக்டோபர் 12) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இறப்பவர்களில் சுமார் 82 விழுக்காட்டினர் தகனம் செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் அஸ்தியைக் கரைப்பதற்கு இது ஒரு குறைந்த செலவிலான வழியாக அமையும் என்று என்இஏ கூறியுள்ளது. தேசிய சுற்றுப்புற அமைப்பின் இரண்டு பூங்காக்களின் நிலப்பகுதியில் சாம்பலைத் தூவுவதற்கான கட்டணம் $320 ஆகும்.

இந்த ஈராண்டு கால முன்னோடித் திட்டத்தின்போது, ​​இச்சேவைக்கான வரவேற்பு, பொதுமக்களின் கருத்துகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு, இதன் நீண்டகாலச் சாத்தியக்கூறுகள் மதிப்பீடு செய்யப்படும்.

அஸ்தி தூவப்படும் இடம், முன்பதிவு ஏற்பாடுகள், நடைமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள், 2027ல் இச்சேவை தொடங்குவதற்கு முன்னதாக வெளியிடப்படும்.

“இந்த முன்னோடித் திட்டம், கடலில் அஸ்தியைக் கரைக்கும் சேவையை மக்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதுடன், அதற்கான தேவையையும் புரிந்துகொண்டு, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சேவையை வடிவமைக்கவும் எங்களுக்கு உதவும்,” என்று என்இஏயின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பிரிவுத் தலைமை இயக்குநருமான சியூ மிங் ஃபாய் கூறினார்.

கடலில் அஸ்தியைக் கரைப்பதைத் தவிர, குடும்பத்தினர் அதை அஸ்தி வைப்பறையில் உள்ள ஓர் அறையிலோ அல்லது வீட்டிலோ வைத்துக்கொள்ளலாம் அல்லது நிலப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் தூவலாம்.

குறிப்புச் சொற்கள்
சேவைபடகுதிட்டம்அஸ்திமாடம்