நினைவுகளைத் தாங்கி நிற்கும் ‘லாவ் பா சாட்’

நினைவுகளைத் தாங்கி நிற்கும் ‘லாவ் பா சாட்’

2 mins read
6c2fcf08-2d8e-4010-ba49-4694e2f39ade
 360 கோண மெய்நிகர் காட்சிகளை ரசிக்கும் பேராளர்கள். - படம்: லாவ் பா சாட்

கடந்த 1800களில் சிங்கப்பூர் காலனித்துவ காலத்தின் முதல் சந்தையாகத் திறக்கப்பட்டு, தற்போது மத்திய வர்த்தக வட்டாரத்தில் செயல்படும் பிரபல உணவங்காடி நிலையமான ‘லாவ் பா சாட்’டின் 130ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.

இந்தக் கொண்டாட்டங்களின் தொடர்பில் அவ்வளாகத்தில் மரபுடைமைப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக 3 மீட்டர் நீளச் சுவரில் வரையப்பட்டுள்ள அந்நிலையத்தின் வளர்ச்சிகளைக் காட்டும் கலைப்படைப்பு, வருகையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தொடக்க காலத்தில் அந்த உணவங்காடி நிலையம், அதன் சுற்றுவட்டாரங்கள் ஆகியவை எவ்வாறு காட்சியளித்தன என்பதைத் திறன்பேசியில் 360 கோண மெய்நிகர் காட்சிகளாகக் காண வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவும் வருகையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், அவ்வளாகத்தில் இதற்கு முன் இருந்த இரும்பு நீரூற்று, மணிக்கூண்டு, பெரிய மணிகள் ஆகியவை குறித்த தகவல்களையும் படங்களையும் கொண்ட தொகுப்பு காண்போரை வியப்படையச் செய்கின்றது.

இந்நிகழ்வில் 130ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ‘லாவ் பா சாட்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த உணவங்காடியின் வரலாற்றைச் சொல்லும் ஆவணக் குறும்படமும் திரையிடப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் இந்த உணவங்காடியின் வரலாறு, அதனுடன் மக்களுக்கு உள்ள தொடர்பு, கலாசாரக் கூறுகள் ஆகியவற்றைப் பற்றிய சிறு நாடகமும் இடம்பெற்றது.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா உள்ளிட்ட பிற சிறப்பு விருந்தினர்கள் 130ஆம் ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், பல அமைப்புகளைச் சேர்ந்த பேராளர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மேலும், உள்ளூர்க் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான 130ஆம் ஆண்டு சிறப்பு கைப்பைகள், குறிப்பேடுகள் ஆகியவை வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த உணவங்காடி காலங்காலமாக பலரது விருப்பமான இடமாக இருந்து வருகிறது என்றும், இன்னும் பல்லாண்டுகாலம் இருக்கும் என்றும் புன்னகையுடன் சொன்னார் லாவ் பா சாட்டில் 30ஆண்டுகளாகக் கடை நடத்தி வரும், திரு திருப்பதி. தொடக்கத்தில் அதிக இந்தியர்கள் வரவில்லை என்றும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய மக்கள் அதிகம் வரத்தொடங்கியுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

தனது இளம் வயதில் தனது தோழிகளும் இங்கு வந்து உணவருந்திச் சென்றதை நினைவுக் கூர்ந்தார் இந்த உணவங்காடியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் திருவாட்டி மாலதி. இங்கு செயல்படும் ‘சாத்தே’ எனும் உணவுவகை தனது மகளுக்குப் பிடிக்கும் என்பதால் தொடர்ந்து இங்கு வருவதாகவும் அவர் சொன்னார்.

கடந்த 1990களில் இருந்தே இங்கு வந்து செல்வதாகவும், தலைமுறைகள் தாண்டிச் செயல்படும் இந்த உணவங்காடியில் தமக்கு நிறைய நினைவுகள் நிறைந்திருப்பதாகவும் சொன்னார் அந்தப் பகுதியில் மின்சாரத் துறை ஊழியராகப் பணிபுரியும் திரு நவநாதன்.

கடந்த 1973ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த உணவங்காடி, அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் கண்டாலும், வருகையாளர்களின் நினைவுகளில் பதிந்து நிற்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்