சிங்கப்பூர் இளையர்கள் தங்களின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய மாற்றங்களையும் சவால்களையும் நம்பிக்கையுடன் கையாள உதவும் வகையில் ‘சாட் சர்க்கிள்ஸ்’ (Chat Circles) என்ற சமூக அடிப்படையிலான மனநல மேம்பாட்டுத் திட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
தேசிய இளையர் மன்றத்தின் எஸ்ஜி இளையர் திட்டத்தின் முக்கிய அங்கமான இத்திட்டத்தை ‘எம்பேக்ட்’ (Empact) நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
500,000 இளையர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ள எஸ்ஜி இளையர் திட்டத்தின் நம்பிக்கை, இணைப்பு, பங்களிப்பு ஆகிய மூன்று தூண்களைக் கொண்டது.
‘எம்பேக்ட்’ (Empact) சமூக நிறுவனம் முன்னெடுத்துள்ள இத்திட்டம், தேசிய இளையர் மன்றத்தின் விரிவான எஸ்ஜி இளையர் திட்டத்தின் ஓர் அங்கமாகச் செயல்படுகிறது.
கல்விப் பருவம், வேலைக்குச் செல்லும் ஆரம்பக்காலம் போன்ற காலகட்டங்களில் ஏற்படும் அழுத்தங்கள் பிரச்சினைகளாக மாறுவதற்குமுன், இளையர்களுக்கு ஆரம்பக்கட்ட ஆதரவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் தொடக்கவிழா புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ஸ்கேப் கட்டடத்தில் உள்ள ‘குரோவ்’ மையத்தில் நடைபெற்றது. இதில் கலாசார, சமூக, இளையர்துறை மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹான்யான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திருவாட்டி கோ, தமது 25வது வயதில் பணிநிமித்தமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்குச் சென்றபோது ஏற்பட்ட சவாலான அனுபவங்களை பகிர்ந்தார்.
பழக்கமில்லாத சூழலில் தனிமையில் தவித்தபோது, தம் தோழி தொலைபேசியில் தம் உணர்வுகளைக் காதுகொடுத்துக் கேட்டது தமக்கு ஆறுதலாக இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
“வாழ்க்கையின் முக்கிய மாற்றங்கள் சவாலானவைதான். ஆனால், அவற்றை நாம் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை,” என்று அவர் கூறினார்.
இளையர்கள் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும், தாங்கள் நேசத்துடன் கேட்கப்படுகிறோம் என்ற உணர்வைப் பெறவும் ஒரு பாதுகாப்பான தளத்தை உருவாக்குவதே ‘சாட் சர்க்கிள்ஸ்’ திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்றார் அவர்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, கேபிட்டலேண்ட் ஹோப் அறக்கட்டளையின் கூட்டு நிதியுதவியுடன் செயல்படும் இத்திட்டம், மருத்துவப் பரிசோதனைகளோ தேவையற்ற அறிவுரைகளோ இல்லாத ஒரு பாதுகாப்பான தளத்தை அமைத்துத் தருகிறது.
“வாழ்க்கையின் மாற்றங்களை எதிர்கொள்ளும் இளையர்களுக்கு எவ்விதப் பாகுபாடும் இல்லாத உண்மையான ஆதரவை வழங்குவதே எங்கள் இலக்கு.
“இங்கு ‘தி ஸ்கூல் ஆஃப் பாசிட்டிவ் சைக்காலஜி’ (TSPP) அமைப்பின் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மூலமாக, இளையர்கள் தங்களின் சொந்தப் பலங்களைக் கண்டறிந்து, அன்றாடச் சவால்களைச் சமாளிக்க அவற்றை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொள்ள இத்தளம் பெரிதும் உதவும் என நம்புகிறோம்,” என்று எம்பேக்ட் நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாகி யாப் சின் ஷெங் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின்கீழ் மாதந்தோறும் நடைபெறும் ஒவ்வொரு வழிகாட்டப்பட்ட அமர்வும் 2 மணி நேரம் நீடிக்கும். இதில் அதிகபட்சமாக 20 ஜோடி இளைய உரையாடலாளர்களும் பயிற்சி பெற்ற தன்னார்வக் கேட்பாளர்களும் பங்கேற்பர்.
அமர்வு தொடங்கும்போது, இளையர்கள் தங்களுக்குப் பிடித்த கேட்பாளர்களைத் தேர்வு செய்து, முதலில் எளிய மன அமைதிப் பயிற்சியில் ஈடுபடுவர். பின்னர், நேர்மறை உளவியல் தூண்டுதல் அட்டைகளின் உதவியுடன் தங்களை ஊக்குவிக்கும் விஷயங்கள், தனிப்பட்ட பலங்கள் குறித்து தன்னார்வலர்களுடன் 60 நிமிடத் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபடுவர். இறுதியில், குழு கலந்துரையாடல் மூலம் தாங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பகிர்ந்துகொள்வதுடன், தங்களின் தனிப்பட்ட பலங்களில் ஒன்றை அடையாளம் காண்பர்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு, ‘தி ஸ்கூல் ஆஃப் பாசிட்டிவ் சைக்காலஜி’ சார்பில் தீவிரமாகக் கேட்டல், பலங்களைக் கண்டறிதல், வழிகாட்டுதல் ஆகியவற்றில் மூன்று மணி நேரக் கட்டாயப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
தமது குடும்பத்தில் நேரடியாகக் கண்ட மனநலப் பிரச்சினைகளே, இத்திட்டத்தில் தன்னார்வலராகப் பங்கேற்க தம்மைத் தூண்டியதாக கல்வியாளர் நூர் ஆயிஷா ஹாஜா முஹைதீன், 50, தெரிவித்தார். தம் பிள்ளைகள் மனச்சோர்வையும் பதற்றத்தையும் எதிர்கொண்டதாக அவர் பகிர்ந்தார்.
தம் மகளுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே உரிய மனநல ஆதரவு கிடைத்ததால் அவர் விரைவாக மீண்டதாகக் கூறிய திருவாட்டி ஆயிஷா, இளையர்களுக்கு ஆரம்பத்திலேயே ஆதரவு வழங்குவதன் முக்கியத்துவத்தை அந்த அனுபவம் உணர்த்தியதாகச் சொன்னார்.
“என் சொந்த வாழ்க்கையில் இதைக் கண்டதால், ஆரம்பக்கட்ட ஆதரவே இளையர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
தற்போதும் மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் தமது மகனுக்கு ஆதரவாக இருப்பது குறித்துப் பேசிய அவர், முன்புபோல் பதற்றமடைவதைத் தவிர்த்து, அமைதியாக அவருடன் அமர்ந்து நேரம் செலவிடுவதைக் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
“நாம் பெரிய மாற்றங்களைச் செய்யத் தேவையில்லை. ஒரு மனிதரின் வாழ்வில் நாம் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது ஒரு தொடர் அலையாகச் சமூகத்தைச் சென்றடையும்,” என்று அவர் கூறினார்.
தகுதியுள்ள 15 முதல் 35 வயதுடைய இளையர்கள் தேசிய இளையர் மன்றத்தின் ‘டிஸ்கவர்’ (discover.nyc.gov.sg) தளம் வழியாக இந்தத் திட்டத்தில் பதிவுசெய்துகொள்ளலாம்.


