தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர் மனநலனை மேம்படுத்த கிரிக்கெட் பயிற்சி

2 mins read
13d8ec99-73e1-471f-bb43-ec49c0e332b0
கிரிக்கெட் பயிற்சி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற நிர்வாகிகள், வெளிநாட்டு ஊழியர்கள். படம்: ஹெச்ஐஏ -

வெளி­நாட்டு ஊழி­யர் நல்­வாழ்வு இயக்­கமான 'எஜிடபிள்யூஓ'வும் சிங்கப்பூர் ரோட்டரி கிளப்பும் இணைந்து ஆறுமாத கிரிக்கெட் பயிற்சித் திட்டத்தை நேற்று துவாஸ் தெற்கு பொழுது போக்கு மையத்தில் தொடங்கின. ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆளுநர் ஜோயன் காம் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கொவிட்-19 கிருமிப்பரவலின்போது வெளிநாட்டு ஊழியர்களின் மனநலம் பெரிதும் பாதிப்பு அடைந்ததைக் கண்டறிந்த வெளிநாட்டு ஊழியர் நல்­வாழ்வு இயக்­கம், அவர்களுக்கென இத்திட்டத்தை வகுத்தது.

ஏறத்தாழ 150 வெளிநாட்டு ஊழியர்கள் பங்குபெறும் இத்திட்டத்தில் கிரிக்கெட் பயிற்றுநர்கள் ஒவ்வொரு வாரமும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பர். இவர்களில் சிங்கப்பூர் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்றுநரும் அடங்குவார்.

விளையாட்டு அணி சீருடை, காலணி, இதர கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை பயிற்சிபெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

"இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளின் ஊழியர்களுக்கு கிரிக்கெட் பொதுவான ஆர்வமாக அமைகிறது. இந்த ஆர்வத்தையொட்டிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும்போது பல புதிய நண்பர்களைச் சந்தித்து விளையாடி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

"இதன் மூலம் அவர்களின் மனநலம் மட்டுமல்லாமல் உடல் நலமும் மேம்படும்," என்று வெளி­நாட்டு ஊழி­யர் நல்­வாழ்வு இயக்கத்தின் தலைமை இயக்குநர் சேமுவல் கிஃப்ட் ஸ்டீபன் கூறினார்.

ஏறக்குறைய 100,000 ஊழியர்கள் தங்கியுள்ள துவாஸ் வட்டாரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக உள்ள நிலையில், இம்முயற்சி நேரத்தை சுவாரசியமான முறையில் செலவிட அவர்களுக்கு உதவும் என்றார் அவர்.

முன்பு தமது சொந்த ஊரில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய திரு தினேஷ்குமார், 28, சிங்கப்பூரில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தற்போது துவாஸ் கிரிக்கெட் அரங்கத்தில் விளையாடி வரும் இவர், கிரிக்கெட் பயிற்சித் திட்டம் அறிமுகம் காண்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்