லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஜனவரி 8ஆம் தேதி தனது இளையர் பிரிவைத் தொடங்கியது.
லிட்டில் இந்தியா பகுதியில் இளையர்களைப் புதிய வர்த்தகங்களில் ஈடுபட ஊக்குவிக்கவும் அறிவுப் பரிமாற்றம் ஏற்படுத்தவும் இந்தப் பிரிவு நோக்கம் கொண்டுள்ளது.
‘தேக்கா பிளேஸ்’ கட்டட அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்தப் பிரிவின் தொடக்கம் குறித்து அறிவிக்கப்பட்டது. இவ்விழாவில் லிஷா அமைப்பின் துணைத் தலைவர் பிரகாஷ், மூத்த ஆலோசகர் ராஜ்குமார் சந்திரா, கௌரவச் செயலாளர் ருத்ராபதி, துணை கௌரவச் செயலாளர் ராமமூர்த்தி உட்படப் பலர் பங்கேற்றனர்.
லிஷா பெண்கள் பிரிவு, இலக்கிய மன்றம் போன்றவற்றைத் தொடர்ந்து, லிஷாவின் 25வது ஆண்டில் இளையர் பிரிவு உதயமாகியுள்ளது.
“லிஷா அமைப்பில் இளையர் பிரிவு தொடங்கவேண்டும் என்ற நீண்டகால எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளது,” என்றார் லிஷாவின் துணைத் தலைவர் பிரகாஷ்.
லிட்டில் இந்தியா பகுதியில் வர்த்தகம் செய்வோர் பெரும்பாலும் நடுத்தர வயதுள்ளவர்களாகவே இருப்பதாகச் சொன்ன அவர், இளையர்களைத் தொழில் முனைவோராக ஊக்குவிக்க இந்தப் பிரிவு துணைபுரியும் என்றார்.
அடுத்த தலைமுறைக்கு வர்த்தகம் குறித்த புரிதலை ஏற்படுத்தவும் அறிவுப் பரிமாற்றத்துக்கும் இந்தப் பிரிவு பங்காற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த அமைப்பு வர்த்தகர்களுக்கான ஆதரவுடன் கலாசாரம் தொடர்பான பல நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், லிட்டில் இந்தியா வட்டாரத்துக்கு இளையர்கள் வந்துசெல்வதை ஊக்குவிக்கவும் கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கச் செய்யவும் இந்தப் பிரிவு நோக்கம் கொண்டுள்ளதாக அமைப்பின் பொது மேலாளர் அப்துல் ரவூஃப் தெரிவித்தார்.
வருங்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களை இந்தப் பிரிவில் இணைத்து அவர்களுக்கான ஆதரவை வழங்கும் எண்ணமும் உள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.