2015ஆம் ஆண்டுத் தடுப்புக் காவலில் இருந்த ஆடவர் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி அவர் சுட்டார்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கான புதிய பாதுகாப்பு கண்காணிப்புக் குழு ஒன்றை அமைப்பதற்குச் சிங்கப்பூர் திட்டமிட்டது.
சிங்கப்பூர் காவல்துறையின் தலைமையில் இயங்கும் ஹெல்த்கேர் தொழில்துறைப் பாதுகாப்பு, கண்காணிப்புக் குழுமம் (ஹெல்த்கேர் ஐஎஸ்எஸ்டபிள்யூஜி) எனும் அந்த அமைப்பை உள்துறை, வெளியுறவு இரண்டாம் அமைச்சர் சிம் ஆன் புதன்கிழமையன்று (அக்டோபர் 14) தொடங்கிவைத்தார்.
சுகாதாரக் கட்டமைப்புப் பகுதிகளில் குற்றச்செயல்கள், மோசடிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கும் திறன்களை அது வழங்கும்.
“காவல்துறைக்கும் மருத்துவத் துறைக்கும் இடையே சிங்கப்பூர் மருத்துவச் சங்கம் பாலமாகச் செயல்பட்டு, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஊழியர்களுக்குத் தொடர்ந்து பகிர்ந்தளிக்கும். சமூக விழிப்புணர்வே நாட்டின் வலிமையான தற்காப்பு அரண்,” என அமைச்சர் சிம் ஆன் வலியுறுத்தினார்.
பொதுப் பயன்பாட்டுப் பகுதிகளின் பாதுகாப்பு, ஊழியர்களின் நலன், நோயாளிகளின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணுவது இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட அவர், ஊழியர்கள் மீதான வன்முறை, துன்புறுத்தல் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
கடந்த ஈராண்டுகளில் பொதுச் சுகாதாரத் துறையில் ஊழியர்கள் மீதான துன்புறுத்தல் சம்பவங்கள் இருமடங்காக அதிகரித்துள்ளதாக அண்மைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இளையர்கள் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவதும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிய 185 உறுப்பினர்களுக்கும் 24 அமைப்புகளுக்கும் தேசிய அளவிலான பாதுகாப்பு விருதுகளைத் திருவாட்டி சிம் ஆன் வழங்கினார்.
