இளையர்கள் முன்னெடுத்து நடத்தும் ஏறத்தாழ 3,000 திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், தேசிய இளையர் மன்றம் அடுத்த ஐந்தாண்டுகளில் $20 மில்லியனை ஒதுக்கும்.
நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த திட்டங்களைக் கொண்ட இளையர்கள் எளிதில் ஆதரவுபெற இந்த நிதி உதவும்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் சனிக்கிழமை (ஜூலை 25) அறிவித்த ‘எஸ்ஜி இளையர் திட்டத்தின்’ (SG Youth Plan) முக்கிய அங்கமாக இந்த நிதி ஒதுக்கீடு விளங்குகிறது.
எஸ்ஜி இளையர் மன்றத்தில் உரையாற்றிய அவர், “இத்திட்டம் ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டு முயற்சியாக அமையும். இளையர்களின் முதன்மையான பங்குடன் அரசாங்கம், நிறுவனங்கள், சமூகம் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்படுவோம்,” என்று குறிப்பிட்டார்.
தேசிய இளையர் மன்றம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் எஸ்ஜி இளையர் மன்றம், இவ்வாண்டு சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘எஸ்ஜி இளையர் திட்டம்’ என்ற ஐந்தாண்டுத் திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
பதினைந்து முதல் 35 வயதுடைய 500,000 இளையர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ள இத்திட்டம் குறித்துப் பேசிய அதிபர், “எதிர்காலத்தை உருவாக்குவது உங்கள் கையில்தான் உள்ளது என்பதைத் வெளிப்படுத்தும் விதமாகவே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இத்திட்டத்தை வகுக்க கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தேசிய இளையர் மன்றமும் இணைந்து நவம்பர் 2024 முதல் மார்ச் 2026 வரை 60,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் கலந்துரையாடி 415,000க்கும் மேற்பட்ட கருத்துகளைத் திரட்டின.
நம்பிக்கை, இணைப்பு, பங்களிப்பு ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறை, நிறுவனப் பங்காளிகள், பொதுத்துறை அமைப்புகள் இணைந்து 2030க்குள் 20,000 வழிகாட்டுதல் வாய்ப்புகளையும், 30,000 பணி அனுபவப் பயிற்சி வாய்ப்புகளையும் இளையர்களுக்கு வழங்கவிருக்கின்றன. இதன் தொடக்கமாக, இவ்வாண்டு 10,000க்கும் மேற்பட்ட பணி அனுபவப் பயிற்சி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.
மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழலில் இளையர்கள் தங்கள் ஆர்வத்தையும் திறன்களையும் கண்டறிய இம்முயற்சி உதவும்.
சுய உதவிக்குழுக்களின் ஆதரவைப் பெறும் 13 முதல் 17 வயதுடைய இளையர்களுக்கு $500 மதிப்புள்ள ‘ஆர்வ ஊக்குவிப்புச் சலுகைகள்’ (Curiosity Credits) வழங்கப்படும்.
கல்வியைத் தாண்டி மற்ற நடவடிக்கைகளில் அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2025ல் ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஹோ முன்மொழிந்த யோசனையால் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி, பணி நேரத்திற்கு வெளியே இளையர்கள் சுதந்திரமாக ஒன்றுகூடவும் இயல்பாக நட்புறவை வளர்த்துக்கொள்ளவும் 12 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
திட்டத்தின் மற்றோர் அங்கமாக, 21 முதல் 35 வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு கட்டுப்படியான கட்டணத்தில் 100க்கும் மேற்பட்ட தங்குமிட வசதிகளை இரண்டு தனியார் நிறுவனங்கள் வழங்கவுள்ளன.
இளையர்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களைச் சமாளிக்கவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தைக் கடந்து வரவும் உதவும் வகையில், பொதுத்துறையைச் சேர்ந்த பங்காளிகள் பல புதிய திட்டங்களை வழங்குவர்.
எஸ்ஜி இளையர் திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் பல வாய்ப்புகளும் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த மேல்விவரங்களுக்கு http://www.discover.nyc.gov.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
இளையர்களின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளோடும் திட்டங்களோடும் அவர்களை இணைக்கும் வகையில் இணையப்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

