தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாவண்யாவிற்குத் தடபுடல் வரவேற்பு

2 mins read
7d8a6f01-36f0-421f-a66f-01b555af8b17
லாவண்யா ஜெய்காந்தை வரவேற்கும் அக்கா கீர்த்தனா ஜெய்காந்த் (நடுவில்), ஜவஹரி ஜெய்காந்த். - படம்: த.கவி

பெண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசிய சாதனை படைத்துள்ள சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனையான 18 வயது லாவண்யா ஜெய்காந்தைக் குடும்பத்தினர், நண்பர்கள், திடல்தட விளையாட்டுத் துறையினர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3ஆம் தேதி) உற்சாகமாக வரவேற்றனர்.

தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் லாவண்யா, ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற உலகத் திடல்தடப் போட்டிகளில் 54.66 நொடிகளில் பந்தயத்தை முடித்து புதிய தேசிய சாதனை படைத்திருக்கிறார்.

ஆகஸ்ட் 8 முதல் 25 ஆம் தேதிவரை எக்குவடோரில் பயிற்சி மேற்கொண்ட லாவண்யா, அதன் பின்னர் பெரு சென்று போட்டிகளில் பங்கேற்று ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பிறகு நாடு திரும்புகிறார்.

புன்னகைப் பொலிவுடன் காணப்பட்ட லாவண்யா, மலர்கள், பலூன்கள், வண்ணப் பதாகைகள் ஆகியவற்றை ஏந்தியபடி காத்திருந்த அன்பர்களுடன் கலந்தார். கரங்கள் பல, அந்த இளம் சாதனையாளரை அரவணைத்துத் தோள்தட்டின.

கடுமையாக உழைத்து, உச்சகட்டமாக எக்குவடோரில் பயிற்சி மேற்கொண்டதற்கான இந்த அரிய வெற்றியை எட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சியை உணர்வதாக லாவண்யா, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

குடும்பத்தினரும் நண்பர்களும் அளித்த வரவேற்பால் மகிழ்ச்சியில் லாவண்யா.
குடும்பத்தினரும் நண்பர்களும் அளித்த வரவேற்பால் மகிழ்ச்சியில் லாவண்யா. - படம்: த.கவி

பெரு செல்வதற்கு முன்னர் தாம் சாதனை நிகழ்த்துவேன் என எதிர்பார்க்கவில்லை என்றார் லாவண்யா.

“இரண்டரை வாரங்களுக்கு எக்குவடோரில் நாள்தோறும் பயிற்சி பெற்றேன். அந்நாட்டின் செங்குத்தான மலையேற்றப் பாதைகளில் ஏறி இறங்கி ஓடினேன்,” என்றும் அவர் கூறினார்.

தடைகளை முறியடிக்கும் இந்தப் பாதை சவாலானது என லாவண்யாவின் பயிற்றுநர் ஃபேபியன் வில்லியம் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“இந்த அனுபவத்தில் லாவண்யாவிடமும் நான் கற்றுக்கொண்டேன். அவரது உணர்வுகள், அவர் எதிர்நோக்கும் அழுத்தம் போன்றவற்றையும் அறிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.

திடல்தட வீராங்கனை லாவண்யாவுடன் பயிற்றுநர் ஃபேபியன் வில்லியம்,(நடுவில்) லாவண்யாவின் குடும்ப உறுப்பினர்கள்.
திடல்தட வீராங்கனை லாவண்யாவுடன் பயிற்றுநர் ஃபேபியன் வில்லியம்,(நடுவில்) லாவண்யாவின் குடும்ப உறுப்பினர்கள். - படம்: த.கவி

நாம் நினைத்ததைக் காட்டிலும் அதிக திறமுள்ளவராக லாவண்யா தன்னை நிரூபித்தார். அவருக்கு அடுத்த இலக்கை வகுப்பது இனி தமக்குக் காத்திருக்கும் முக்கியப் பணி, என்று எட்டு மாதங்களாக லாவண்யாவுக்குப் பயிற்றுவிப்பாளராக உள்ள திரு ஃபேபியன் கூறினார்.

லாவண்யாவின் சாதனை குறித்து பெருமை அடைவதாகக் கூறும் அவரது தந்தை ஜெய்காந்த் ஆறுமுகம், இந்த வெற்றியால் தம் மகள் மேலும் ஊக்கம் அடையப்போவதாக நம்புகிறார்.

“திடல்தடத் துறையை லாவண்யா அவரே தேர்ந்தெடுத்தார். அந்தச் சுதந்திரத்தைப் பெற்றோராகிய நாங்கள் தந்திருந்தோம். எங்கள் மகளைத் தொடர்ந்து ஊக்கம் கொடுத்தோம், சில நேரங்களில் திருத்தினோம். நல்லவற்றை ஏற்று நடந்துகொண்டது லாவண்யாவின் பெரும்பலம்,” என்று அவர் கூறினார்.

நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் தம்மையொத்த விளையாட்டு வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பது அவசியம் என்றார் லாவண்யா.

குறிப்புச் சொற்கள்