தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜனநாயகப் பிரசாரங்களில் சட்டம், ஒழுங்கு அவசியம்: அமைச்சர் சண்முகம்

2 mins read
அமெரிக்க அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க் படுகொலை குறித்துக் கருத்துரைத்தார்
aa1f2ca2-08e6-4885-9d8b-7882067fdea0
அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் பிளவுகளைக் கருத்தில் கொள்ளும்போது அந்நாட்டு அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க்கின் கொலை வியக்கத்தக்கதன்று என தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் குறிப்பிட்டார்.  - படம்: சாவ்பாவ்

முறையான ஜனநாயகப் பிரசாரத்திற்கு சட்டம், ஒழுங்கு அவசியம் என்று சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் வலியுறுத்தியிருக்கிறார். 

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) லகுனா நேஷனல் கோல்ஃப் ரிசோர்ட் மன்றத்தில் நன்கொடை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

செப்டம்பர் 10ஆம் தேதி அமெரிக்க அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்துத் திரு சண்முகம் அவ்வாறு கூறினார்.

கிர்க்கின் கொலை அதிர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் பிளவுகளைக் கருத்தில் கொள்ளும்போது அது வியக்கத்தக்கதன்று என்றார் அவர்.

கடும் வெறுப்புப் பேச்சு, அரசியல் எதிராளிகளை எதிரிகளாக முத்திரை குத்துவது போன்றவை அமெரிக்க அரசியல் சூழலை மோசமாக்கிவிட்டதாக அமைச்சர் கூறினார். 

“குறிப்பிட்ட சிலரே ஆதாயங்கள் அனைத்தையும் பெறுவர் என்ற மனப்பான்மை, எளிதில் கிடைக்கும் ஆயுதங்கள், சீரழிந்த சட்டம், ஒழுங்கு ஆகியவை இணைந்து, பிரபல அரசியல் ஆர்வலர்கள் கொல்லப்படும் சூழலை உருவாக்கியுள்ளன,” என்றார் திரு சண்முகம்.

சட்டம், ஒழுங்கை வலியுறுத்திப் பேசிய அமைச்சர், ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டால் மக்களிடையே முறையான பிரசாரம் சாத்தியமில்லை என்றார். 

“மக்கள் பாதுகாப்பாக உணர்வதையும் குற்றங்கள் குறைவாக இருப்பதையும் நிறுவனங்கள் மீது நம்பிக்கை இருப்பதையும்  சட்டம், ஒழுங்கு உறுதி செய்கிறது,” என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் கடுமையான சட்டங்கள் சமூக நிலைத்தன்மைக்கு முக்கியக் காரணம் என்று அமைச்சர் சண்முகம் சுட்டிக்காட்டினார்.

“துப்பாக்கி வன்முறை, போதைப்பொருள் கடத்தல், வெறுப்புப் பேச்சு ஆகியவை இங்கு சகித்துக்கொள்ளப்படமாட்டா. துப்பாக்கிச்சூடு நடத்துவோர் அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. எந்தவோர் இன, சமயக் குழுவுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றம்,” என்றும் அவர் கூறினார்.

“அமெரிக்காவில் பேச்சுரிமை என்ற பெயரில் புனித நூலை எரிப்பது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படலாம். ஆனால், சிங்கப்பூரில் அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் சிறைக்குச் செல்ல நேரிடும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன், சீர்திருத்த நடவடிக்கைகளும் இங்குத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார் அமைச்சர்.

சிங்கப்பூரர்கள் மற்ற நாட்டினரைவிட உள்ளார்ந்த வகையில் சிறந்தவர்கள் என்பதாலோ இங்குள்ள நிலைமை வேறுபட்டிருப்பதாலோ அல்ல, நாட்டின் கடுமையான சட்டங்கள் மற்றும் சமூகக் கொள்கைகளால்தான் இது சாத்தியமாகிறது என்று அமைச்சர் விளக்கினார்.

சிங்கப்பூரின் அமைதியான சூழலைப் பாராட்டினாலும், அமைச்சர் சண்முகம் சில ‘கவலைக்குரிய போக்குகள்’ நிலவுவதாகவும் கூறினார். எனினும் அவற்றை அவர் விவரிக்கவில்லை.

அரசியல்வாதிகள் சிலர் இங்கு இன, சமய அடிப்படையில் அடையாள அரசியலில் ஈடுபடும் போக்கு கவலை அளிப்பதாகத் திரு சண்முகம் குறிப்பிட்டார். ஆனால் அந்த அரசியல்வாதிகளின் பெயர்களை அவர் சொல்லவில்லை.

அடையாள அரசியல் லாபத்துக்காகச் செயல்பட்டால், அது இறுதியில் சிங்கப்பூருக்குத்தான் தீங்கு விளைவிக்கும் என்று அமைச்சர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்