சாங்கி விமான நிலையத்தில் பிப்ரவரி 13ஆம் தேதியன்று திரண்ட ‘பிரீமியம் டாக்சி’ எனப்படும் மேம்பட்ட பயண அனுபவத்துக்கான டாக்சிகளின் ஓட்டுநர்கள் எந்தவொரு வேலை நிறுத்தம் அல்லது முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை எனக் காவல்துறை விசாரணையில் தெரியவந்ததாக உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிகமான பயணிகளைக் கொண்ட குழுவிற்காகச் சோதனை அடிப்படையில் புதிய சிற்றுந்து சேவையைச் சாங்கி விமான நிலையக் குழுமம் வழங்குவது குறித்து கவலை தெரிவித்த டாக்சி ஓட்டுநர்கள், அதுபற்றி கலந்துரையாட பிப்ரவரி 13 ஆம் தேதி கூடியதாகத் திரு சண்முகம் அச்சம்பவத்தை விவரித்தார்.
மேலும், அக்கூட்டம் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று எனவும் வேலை நிறுத்தமோ போராட்டமோ அங்கு நடக்கவில்லை எனக் காவல்துறை கண்டறிந்ததாகவும் அவர் சொன்னார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறதா என ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸி யாவ் குவான் எழுப்பிய கேள்விக்கு மார்ச் 4ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற அமர்வில் எழுத்துபூர்வமாக பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், இக்கூட்டத்தால் எந்தவொரு சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தாது என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
திரு ஸீக்கும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் முன் வாய்க்கும் தனித்தனியாக எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், அக்கூட்டம் ஏன் நடந்தது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் விவரித்தார்.
சாங்கி விமான நிலையக் குழுமம் 2008ஆம் ஆண்டு முதல் சாங்கி விமான நிலையத்தின் தரைத்தளப் போக்குவரத்து சேவையில் உட்லண்ட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை ஈடுபடுத்தி வருவதாக அமைச்சர் சீ கூறினார்.
இது இரு நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் என்பதால், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் இதில் தலையிடவில்லை என்றார் திரு சீ.
தொடர்புடைய செய்திகள்
“பிப்ரவரி 1ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் புதிய சிற்றுந்து சேவை அறிமுகமானது. உட்லண்ட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அச்சிற்றுந்துகளை அந்நிறுவனத்தின் மேலாளர் ஒருவர், விமான நிலையத் தரைத்தளப் போக்குவரத்து சேவையகத்தில் ‘பிரீமியம் டாக்சி’, ‘மாக்ஸி கேப்’ டாக்சி ஓட்டுநர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நிறுத்தினார்,” என அவர் குறிப்பிட்டார்.
இதனால் கவலையடைந்த டாக்சி ஓட்டுநர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பயணிகளின் எண்ணிக்கையில் மாற்றத்தை உணர்ந்ததால் பிப்ரவரி 13ஆம் தேதி விமான நிலையத்தில் கூடினர் என்றார் அவர்.
டாக்சி ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டறிந்த சாங்கி விமான நிலையக் குழுமம் சிற்றுந்து சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்ததாகவும் அமைச்சர் சொன்னார்.
மேலும், சில டாக்சி ஓட்டுநர்களை நியாயமற்ற முறையில் நடத்தியதற்காக உட்லண்ட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் மேலாளரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது எனப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.