சிங்கப்பூருக்குக் கடுமையான சட்டக் கட்டமைப்பு, செயலாக்க முறை உள்ளபோதும் தண்டனைக்குப் பிறகும் கைதிகளைப் பராமரித்து, திருத்தி அவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
கடந்த 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘கேர்’ எனும் முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கான சமூகச் செயல் கட்டமைப்பு, கடந்த 25 ஆண்டுகளாக அதனை வெற்றிகரமாகச் செய்து வருவதை சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் குறிப்பிட்டார்.
‘பார்க்ராயல் கலெக்ஷன்‘ மரினா பேயில் வியாழக்கிழமை (ஜூலை 24) நடைபெற்ற முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கான சமூகச் செயல் கட்டமைப்பின் உச்சநிலைக் கூட்டத்தில் திரு டோங் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அந்தக் கட்டமைப்பு நிறுவப்பட்டதற்கு முன்னதாக, முன்னாள் கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அமைப்புகள் ஆதரவு வழங்கியபோதும் அந்த அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அவ்வளவாக இல்லை என்றும் திரு டோங் குறிப்பிட்டார்.
“முன்னாள் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களை ஒருங்கிணைப்பதற்கு சிந்தையாற்றல் மிகுந்த, ஒத்திசைவு தேவைப்படும் சமூக அளவிலான அணுகுமுறைக்கான அங்கீகாரம் பெருகி வந்த நேரத்தில் ‘கேர்’ கட்டமைப்பு 2000ல் உருவானது,” என்று திரு டோங் கூறினார்.
சீர்திருத்த மறுவாழ்வுக் குழுப்பணிக்கான தனது ஆக அண்மைய நூலை சிங்கப்பூர்ச் சிறைத் துறை வெளியிட்டதாகத் தெரிவித்த திரு டோங், அதற்காக நிபுணர்கள் பலர் ஒன்றிணைந்து பணியாற்றியதை நினைத்து மகிழ்வதாகக் கூறினார்.
தொடக்கத்தில் ஏழு முக்கிய உறுப்பு அமைப்புகளைக் கொண்ட அந்தக் கட்டமைப்பு, தற்போது 10 உறுப்பினர்களுடன் 170க்கும் அதிகமான சமூகப் பங்காளிகளைக் கொண்டுள்ளது.
பொதுமக்கள், தனியார் துறையினர் என 450க்கும் அதிகமானோர், கட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்று கற்றுக்கொண்டதுடன் தங்கள் தொடர்பு வட்டத்தையும் பெருக்கிக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் கைதிகளையும் அவர்களது குடும்பங்களையும் சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க உதவும் கூட்டு முயற்சிகளைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொண்டனர்.
குற்றவாளிகள் மறுபடியும் குற்றம் புரியும் எண்ணிக்கை, காலப்போக்கில் குறைந்ததற்கு அந்த இயக்கம் கணிசமாகப் பங்களித்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில், கட்டமைப்பைச் சேர்ந்த பங்காளி நிறுவனங்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2023ல் அமைக்கப்பட்ட ‘டிசிஸ்டர்’ கட்டமைப்பு, அதற்கு மேலும் கைகொடுத்துள்ளது.