பொதுநலன் என்ற பெயரில் அரசாங்கத்திற்குக் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது என்றும், சட்டம் எப்போதும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் கவசமாகவே இருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர்த் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இரண்டாவது நீதி சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் இருநூறாவது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வேளையில், புதன்கிழமை (நவம்பர் 25) காலை தொடங்கிய உலகளாவிய சட்டமுறை ஆட்சி மாநாட்டில் சிறப்புரையாற்றிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், “சிங்கப்பூரில் சட்டம் என்பது தனிமனித உரிமையை மட்டும் பார்க்காமல், சமூக நலனையும் சேர்த்துப் பார்க்கும் கட்டமைப்பு; சுதந்திரம் கிடைத்தபோது, கையில் எதுவும் இல்லாத சிறிய நாடாக இருந்த சிங்கப்பூர், இந்தப் புரிதலில்தான் நாட்டைக் கட்டியெழுப்பியது,” என்று கூறினார்.
இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பங்கேற்ற ஏறத்தாழ 600 பேராளர்கள் முன்னிலையில் உரையாற்றிய தலைமை நீதிபதி, சிங்கப்பூரின் இன, சமய, பண்பாட்டுப் பன்முகத்துவம்தான் நாட்டின் அடையாளம்; அவ்வகையில் பிரிவினைகள் வேரூன்றும் முன்பே தடுக்கும் வகையில் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று விவரித்தார்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்த தலைமை நீதிபதியின் உரையில், மக்களின் நலனைக் காக்கும் கோட்டையாக சட்டங்கள் திகழ்வது சார்ந்த மேற்கோள்கள் முக்கிய இடம்பிடித்தன.
‘‘சுதந்திரமான நீதித்துறையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பும் இல்லையென்றால், சட்டம் என்பது அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் கவசமாக இல்லாமல், ஆள்வோரின் ஆயுதமாக மாறிவிடும்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரிமைகள் கட்டுப்பாடற்றவை அல்ல; அதிகாரமும் கட்டுப்பாடற்றதன்று!
‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, பேச்சுரிமையை வழங்குகிறது. ஆனால் பிரிவு 14(2), பொதுநலன் கருதி அந்த உரிமைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
‘‘அதே போல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15, சமய உரிமையைப் பாதுகாக்கிறது. ஆனால் பிரிவு 15(4), சமய நம்பிக்கைகளிலிருந்து எழும் செயல்கள் பொது ஒழுங்கு, பொதுப் பாதுகாப்பு தொடர்பான பொதுச் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது.
“அவ்வகையில் தகுந்த சூழலில் தனிமனித நலன், சமூகத்தின் பொது நலனுக்காக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்,” என்று குறிப்பிட்டார் திரு மேனன்.
சான் ஹியாங் லெங் கொலின் வழக்கில் இந்த நிலைப்பாடு விளக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், உரிமைகள்மீது கட்டுப்பாடு விதிக்கலாம் என்பது மட்டுமல்லாமல் கட்டுப்பாடுகளும் சட்டத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள்,’’ என்றார்.
நிலப் பற்றாக்குறை கொண்ட நாட்டில் பொது வீடமைப்பு, வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட 1966ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், 1967ஆம் ஆண்டின் நிலப் பட்டாக் கூட்டுரிமைச் சட்டத்தின் கீழான விற்பனை விதிகள் ஆகியவை, தனிநபர் சொத்துரிமையையும் பொதுநலனையும் எவ்வாறு சமநிலையில் கையாண்டன என்பதையும் உரையின்போது எடுத்துரைத்தார் திரு மேனன்.
‘‘இந்தச் சட்டங்கள் அரசாங்கத்திற்குப் பரந்த அதிகாரங்களை வழங்கினாலும், எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான கடுமையான சட்டப் பாதுகாப்புகளையும் உள்ளடக்கியுள்ளன,’’ எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றும் தத்தமது வரம்பிற்குள் நின்று, பரஸ்பர மரியாதையுடன் செயல்படுவதே சிங்கப்பூர் அரசியலமைப்பின் வலிமை என உரைத்த தலைமை நீதிபதி, குறிப்பாக, தண்டனைச் சட்டத்தின் 377ன் ‘ஏ’ பிரிவு தொடர்பான வழக்கில், நீதிமன்றம் தனது சட்ட வரம்பிற்குள் நின்று கருத்து தெரிவித்ததையும், அதனைத் தொடர்ந்து அரசாங்கம் மக்களுடன் விரிவான கலந்தாலோசனை நடத்தி அச்சட்டப் பிரிவை நீக்கியதையும் அரசுத் துறைகளுக்கு இடையிலான ஆக்கபூர்வமான உரையாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
நிறைவாக, சட்டம் என்பது பரம்பரையாகக் கிடைக்கும் சொத்தோ ஒருமுறை உருவாக்கிவிட்டு மறந்துவிடக் கூடிய அமைப்போ கிடையாது என்றும் அது ஒவ்வொரு தலைமுறையும் காக்க வேண்டிய பொறுப்பு என்றும் திரு மேனன் வலியுறுத்தினார்.
உலகளாவிய சட்டமுறை ஆட்சி மாநாடு 27ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
