பெற்றோர் பகிர்ந்துகொள்ளும் விடுப்பையும் தந்தையருக்கான கட்டாய விடுப்பையும் அதிகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தபோது, விடுப்பு எடுத்து பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள இந்த விடுப்பு அதிகரிப்பு தந்தையர்களை ஊக்குவிக்கும் என்று இணக்கம் காணப்பட்டது.
கூடுதல் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்டுக்கொண்டனர்.
விடுப்புகள் குறித்து முதலாளிகளுக்கு தெளிவான வழிகாட்டி நெறிமுறைகள் தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பெற்றோருக்கு ஆதரவு வழங்கும் வகையில் இதுபோன்ற பராமரிப்புத் தெரிவுகளை அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார்.
ஆனால், அதே வேளையில் குடும்பங்களுக்கு ஏதுவான வேலையிடச் சூழல்களை முதலாளிகள் அமைத்துத் தர வேண்டும் என்றார் அவர்.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்குள் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது பெற்றோர் பகிர்ந்துகொள்ளும் விடுப்பின்கீழ் கூடுதலாக 10 வாரங்கள் வழங்கப்படும் என்று தேசிய தின பேரணி உரையின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
பெற்றோர் பகிர்ந்துகொள்ளும் விடுப்பில் கொண்டு வரும் மாற்றத்தின்கீழ் வேலை செய்யும் தாய்மார்கள் தங்களுக்கு வழங்கப்படும் 16 வார விடுப்பில் நான்கு வார விடுப்பைத் தங்கள் கணவருடன் பகிர்ந்துகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
புதிய திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியன்றும் அதற்குப் பிறகும் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு பெற்றோர் பகிர்ந்துகொள்ளும் விடுப்பின்கீழ் ஆறு வார விடுப்பு வழங்கப்படும்.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியன்றும் அதற்குப் பிறகும் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு பத்து வார விடுப்பு வழங்கப்படும்.
தந்தையருக்கு வழங்கப்படும் கட்டாய விடுப்பும் இருமடங்கு அதிகரிக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய தந்தையருக்கு சம்பளத்துடன் நான்கு வார விடுப்பு வழங்கப்படும்.
இதற்கான தொகையை அரசாங்கம் செலுத்தும்.

