சரிபார்ப்புக் குழு தயார்செய்த அறிக்கைகளை வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) கூறியுள்ளார்.
அக்குழு, வழக்கறிஞர் சங்கத்தில் தவறான நடத்தை இடம்பெற்றதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தது. அதில் தகவல் அளித்தோரைப் பாதுகாக்க அவர்களின் விவரங்களை நீக்கிவிட்டு அறிக்கைகளை உறுப்பினர்களுக்கு வெளியிடவேண்டும் என்று திரு டோங் குறிப்பிட்டார்.
விசாரணையின் கண்டுபிடிப்புகள்
வழக்கறிஞர் சங்கத்தின் வேலையிடக் கலாசாரம், அதன் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றின் தொடர்பில் பல பிரச்சினைகள் இருந்ததைச் சரிபார்ப்புக் குழு கண்டுபிடித்ததாக அவர் சுட்டினார்.
“இவை அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய விவகாரங்களாகும். அந்த வகையில், உறுப்பினர்களுக்கும் சங்கத்துக்கும் இடையே வெளிப்படையான, ஆக்ககரமான கருத்துப் பரிமாற்றம் இருப்பது முக்கியம். அதற்குக் கைகொடுக்கும் வகையில் விவகாரங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு அவை குறித்து ஆலோசிக்க போதுமான தகவல்கள் வெளியிடப்படவேண்டும்,” என்றார் அமைச்சர் டோங்.
புதன்கிழமை நடந்த சந்திப்பு
வழக்கறிஞர் சங்கத்தில் இடம்பெற்ற வேலையிட நடத்தை தொடர்பான விசாரணையின் முடிவுகளைப் பற்றிப் பேச ரகசியச் சந்திப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) நடத்தப்பட்டது. சர்ச்சைகளுக்கான மாற்றுத் தீர்வு நிலையமான மேக்ஸ்வெல் சேம்பர்சில் அச்சந்திப்பு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட பலர், தலைமைத்துவத்தின் தவறுகளைப் பற்றிய முழு அறிக்கையை வெளியிடுமாறு குரல் எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு செய்யப்படாவிட்டால் வழக்கத்துக்கு மாறான நிர்வாகக் குழுச் சந்திப்பைக் (general meeting) கூட்டும்படி குரல் எழுப்பப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
அமைச்சுகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்
2022லிருந்து 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி மின்னஞ்சல்வழி சட்ட அமைச்சுக்கும் மனிதவள அமைச்சுக்கும் அனுப்பப்பட்டன.
அதை அனுப்பியவர் தனது அடையாளத்தை வெளிடவில்லை.
இணையப் பதிவு
மின்னஞ்சல் அனுப்பப்பட்ட அதே மாதம், வழக்கறிஞர் சங்கத்தில் வேலையிடப் பகடிவதைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி இணையத்தில் பதிவிடப்பட்டது.
சங்கத்தில் பணியாற்றிய 70க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானோர் சென்ற ஆண்டு பணியிலிருந்து விலகிக்கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஊழியர்கள், தற்போதைய ஊழியர்கள் அத்தகவலைத் தெரிவித்தனர்.


