சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் தனது அமைப்பின் பணிச்சூழல் புகார்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்த தணிக்கைக் குழுவின் அறிக்கையை வெளியிடவுள்ளதாக உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
இருப்பினும், விசாரணையின்போது பங்கேற்றோரின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்கும் நடவடிக்கை பூர்த்தியடைந்த பிறகே இவ்வறிக்கை வெளியிடப்படும் என்று தனது உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதியன்று வழக்கறிஞர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மட்டுமான நான்கு மணி நேரக் கலந்துரையாடலில், இந்த விசாரணை அறிக்கையையும் அது தொடர்பான பிற விவரங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதனைத் தொடர்ந்து, நேர்காணலில் பங்கேற்றவர்களின் விவரங்களைப் பாதுகாக்கும் வகையில் உரிய திருத்தங்களுடன் அறிக்கையை உறுப்பினர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியன்று வலியுறுத்தினார்.
அன்றைய தினமே சங்கத் தலைவர் டான் செங் ஹான், நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் ஊழியர்கள் உட்பட பலருக்கு அளிக்கப்பட்ட ரகசியத்தன்மைக்கான வாக்குறுதியைச் சங்கம் காப்பாற்ற வேண்டும் என்பதை விளக்கினார்.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று சட்ட அமைச்சுக்கும் மனிதவள அமைச்சுக்கும் அனுப்பப்பட்ட பெயரிடப்படாத மின்னஞ்சல் ஒன்றின் மூலமே இந்த விசாரணை தொடங்கியது.
இதில் தவறான பணிச்சூழல் நடத்தை, நிர்வாகப் பலவீனங்கள், புகார்களைக் கையாளுவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நிதி, நிர்வாகக் கட்டுப்பாடுகளில் உள்ள சிக்கல்கள் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு, நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதிக்குள் கடிதம் அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் தங்கள் பெயர்களையும் வாக்குமூலங்களின் சில பகுதிகளையும் மறைத்துக்கொள்ளும் உரிமை வழங்கப்படுகிறது. இதற்கான பதிலைச் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதிக்குள் அவர்கள் அளிக்க வேண்டும்.
தவறினால் அவர்களின் அறிக்கைகள் ரகசியக் காப்பு அடிப்படையில் வெளியிடப்பட மாட்டாது. மேலும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களுக்குச் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் வாய்ப்பும் அளிக்கப்படும்.
2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சங்கத்தின் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்தில் பெரும் குறைபாடுகள் இருந்ததை இந்த விசாரணை சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், திட்டமிட்ட நிதி முறைகேடுகளோ அல்லது உண்மைகளை மறைக்கும் முயற்சிகளோ நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிர்வாகக் குறைபாடுகளைச் சீரமைத்து, அமைப்பின் நம்பிக்கையை மீட்டெடுக்கத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை சங்கத்தின் நிர்வாகம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


