பிரித்தம் சிங்கை வழக்கறிஞர் பதிவேட்டிலிருந்து நீக்க கோரிக்கை

பிரித்தம் சிங்கை வழக்கறிஞர் பதிவேட்டிலிருந்து நீக்க கோரிக்கை

2 mins read
5392569c-de1e-4906-9e66-77d2daeada1e
வழக்கறிஞரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங். - படம்: பெரித்தா ஹரியான்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கை வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் பதிவேட்டிலிருந்து நீக்குமாறு சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் கோரி வருவதாக வெள்ளிக்கிழமை (ஜூலை 31) உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு உறுதிமொழியின்கீழ் பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்காகத் திரு சிங் தண்டிக்கப்பட்டதே அதற்குக் காரணம்.

திரு சிங்மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் விதிக்கப்பட வேண்டுமா என்பதை முடிவுசெய்வதற்காக ஆகஸ்ட் 13ஆம் தேதி மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் விசாரணைக்கு முன்பு வழக்கறிஞர் சங்கம் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளது.

நீதிபதிகள் கண்ணன் ரமேஷ், நீதிபதி சீ ஊன் ஆகியோருடன் பதவி விலகும் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையில் விசாரணை நடைபெறும்.

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் எம்.பி. ரயீசா கான் நாடாளுமன்றத்தில் கூறிய தவறான கூற்றை விசாரித்த சிறப்புரிமைக் குழுவிடம் பதவியேற்பு உறுதிமொழியின்கீழ் தவறான சாட்சியங்களை வழங்கியதாக திரு சிங் இரு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றதை அடுத்து இந்த விசாரணை வந்துள்ளது. இரு குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திரு சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டத் தொழில் சட்டத்தின்கீழ் தேவைப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளை இந்த மாதத் தொடக்கத்தில் தொடங்கியதாக வழக்கறிஞர் சங்கம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது.

சட்டத் தொழில் சட்டப் பிரிவு 94Aயின் கீழ், வழக்கறிஞர் ஒருவர் மோசடி அல்லது நேர்மையின்மை தொடர்பான குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டால், வழக்கறிஞர் சங்கம் ஒழுங்கு நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

வழக்கறிஞர்களுக்கான மிக உயர்ந்த ஒழுங்கு நடவடிக்கை அமைப்பான மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம், என்ன தண்டனை விதிப்பது என்பதை முடிவுசெய்யும். சட்டப் பிரிவு 98ன் கீழ், ஒரு வழக்கறிஞரை வழக்கறிஞர் பதிவேட்டிலிருந்து நீக்கவோ, ஐந்து ஆண்டுகள்வரை தொழில் செய்வதிலிருந்து இடைநீக்கம் செய்யவோ, கண்டிக்கவோ, $100,000 வரை அபராதம் விதிக்கவோ அல்லது அந்தத் தண்டனைகளில் சிலவற்றுக்கு உட்படுத்தவோ அது உத்தரவிடலாம்.

குறிப்புச் சொற்கள்
வழக்கறிஞர்தலைமைச் செயலாளர்பாட்டாளிக் கட்சி