தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முகம் சுளிக்கவைக்கும் கருத்து: வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் பதவி விலகல்

2 mins read
716b3913-27d6-4c76-abf0-7af09707566d
திரு சியா பூன் டெக்கின் கருத்து பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: சியா வோங் சட்ட நிறுவனம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவரைப் பற்றி முகம் சுளிக்க வைக்கும் கருத்துகளைத் தெரிவித்த வழக்கறிஞருக்கு அதிருப்திக் குரல்கள் எழுந்தன.

அந்தக் கருத்துகளைத் தெரிவித்த திரு சியா பூன் டெக் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகுமாறு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திருவாட்டி லீசா சேம் ஹுயி மின், திரு சியாவைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 22ஆம் தேதி லிங்க்ட்இன் தளத்தில் திரு சியா பதிவிட்ட கருத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்று திருவாட்டி லீசா சேம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) காலை 11 மணி நிலவரப்படி, வழக்கறிஞர் சங்கத்தின் இணையப்பக்கத்திலிருந்தும் சங்க உறுப்பினர் பட்டியலிலிருந்தும் திரு சியாவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் அழகியல்ல என்று திரு சியா தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அப்பெண்ணை அவர் இழிவுபடுத்திய வகையில் அவரது கருத்து அமைந்திருந்தது.

திரு சியாவின் கருத்துகள் முறையானதல்ல என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

அவருடைய கருத்துகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மற்றவர்களையும் பாதிக்கும் என்றார் அவர்.

இதனால் தங்களுக்கு இருக்கும் கவலைகளைப் புறக்கணிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் கருத்துகள் தெரிவித்தால் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அதை வெளியே சொல்லாத நிலை ஏற்படக்கூடும் என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) இரவு 9.15 மணி அளவில் திரு சியா தமது பதிவை நீக்கினார்.

லிங்க்ட்இன் தளத்தில் உள்ள தமது கணக்கையும் அவர் நீக்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்