தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரிகள் அல்லர்: சில்வியா லிம்

2 mins read
99b889f9-8197-47c8-87d3-2c783b9b4811
நாடாளுமன்ற விவாதத்தின்போது பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் உரையாற்றினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களும் பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களும் போட்டியாளர்களே தவிர, எதிரிகள் அல்லர் என்று பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இரு கட்சிகளும் ஒரே நோக்கத்தைக் கொண்டுள்ளன என்றார் அவர்.

“மக்களின் சார்பில் செயல்படவும் சிங்கப்பூர் நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கவும் மக்கள் எங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள்,” என்றார் திருவாட்டி லிம்.

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி லிம், அதிபரின் உரை மீதான விவாதத்தின் ஐந்தாம் நாள் அமர்வில் பேசினார்.

பிரிட்டனில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அனுபவம் பற்றி திருவாட்டி லிம் தமது உரையில் குறிப்பிட்டார்.

வார இறுதியின்போது காஸா நிலவரம் தொடர்பில் லண்டனில் நடைபெற்ற பேரளவிலான ஆர்ப்பாட்டத்தின்போது பிரிட்டி‌ஷ் காவல்துறை எவ்வாறு ஜனநாயகக் கொள்கையைக் கட்டிகாத்தது என்பதை ஆளுங்கட்சியின் அமைச்சர் விவரித்துச் சொன்னதைத் திருவாட்டி லிம் மேற்கோள் காட்டினார்.

காவல்துறையின் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும்படி எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி கேட்டதையும் அவ்வாறு உறுதிகொடுக்கப்பட்டால் அதைத் தாம் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னதையும் திருவாட்டி லிம் சுட்டினார்.

“அப்போது நான் ஆழமாக யோசித்தேன். அரசியல் போட்டியாளர்கள், ஒருவரை ஒருவர் பாராட்டவும் முடிந்தது, நம்பிக்கை வைக்கவும் முடிந்தது,” என்றார் அவர்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்திலும் அதே போக்கு கடைப்பிடிக்கப்படும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் திருவாட்டி லிம் குறிப்பிட்டார்.

“அரசியல், போட்டித்தன்மைமிக்கது. ஆனால் ஏன் நாம் இங்கு இருக்கிறோம்? தெரிவு செய்யப்பட்ட பொறுப்பில் மக்களுக்குச் சேவை செய்வதே அதற்கு முக்கியக் காரணம் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

புதிய தவணைக்கால நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அவையில் நம்பிக்கையை உறுதிப்படுத்துவார்கள் என்று நம்புவதாகவும் திருவாட்டி லிம் சுட்டினார்.

“குறைந்தபட்சம், இங்குள்ள சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் சொகுசுகளைக் கைவிட்டு தேசிய பொறுப்புகளைக் கையில் எடுத்துள்ளனர்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்சில்வியா லிம்நாடாளுமன்ற உறுப்பினர்கள்