$15.1 பில்லியன் உபரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம்

$15.1 பில்லியன் உபரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம்

3 mins read
c7a9adc9-1d37-4dcf-95f4-82a1a49bc9bf
தற்போதைக்கு வரி உயர்வுகளைத் தவிர்த்து நிலைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உபரி நிதியைக் கொண்டு குடும்பங்களின் செலவுச் சுமையைக் குறைக்க வேண்டும் என்றும் இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங் பரிந்துரைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் $15.1 பில்லியன் வரவுசெலவு உபரி நிதியை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

இந்த நிதி, அவசர காலத்திற்காகச் சேமிக்கப்பட வேண்டுமா அல்லது சிங்கப்பூரர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமா என்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

ஆளும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் இந்த உபரியை நிலையற்ற உலகில் ஒரு ‘காப்பீட்டு உத்தி’ மற்றும் பாதுகாப்புக் கவசமாகக் கருதுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது ‘தேவையற்ற முறையில் நிதியைப் பதுக்கி வைக்கும் செயல்’ எனும் கருத்தை முன்வைத்தனர்.

சிங்கப்பூரின் 2025ஆம் ஆண்டு வரவுசெலவு உபரி, எதிர்பார்த்ததைவிட அதிகமாக $15.1 பில்லியனாகப் பதிவாகி உள்ளது. இது அரசாங்கம் முன்னதாக மதிப்பிட்ட $6.8 பில்லியனைவிட இருமடங்கிற்கும் அதிகம். அண்மைய வரலாற்றில் இது மிகப் பெரிய உபரிகளில் ஒன்றாகும் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 விழுக்காடு) என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.

பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆற்றிய உரையில், பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், 2025ல் பொருளியல் ஐந்து விழுக்காடு வளர்ச்சியை எட்டியதும் வரி வசூல் அதிகரித்ததும் இந்த உபரிக்குக் காரணம் என்று கூறினார்.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், பல ஆண்டுகளில் காணாத இந்த மிகப் பெரிய நிதி உபரி குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற விவாதத்தின் முதல் நாளில் பேசிய பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம், அரசாங்கம் நிதி நிலைமையை எப்போதும் மிகக் குறைவாக மதிப்பிடும் போக்கைக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

“திட்டமிடப்பட்ட பற்றாக்குறைகள் எப்படித் தொடர்ந்து ஆரோக்கியமான உபரியாக மாறுகின்றன என்பதை மன்றம் ஆராய வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் வரி வருவாயின் ஏற்ற இறக்கங்களைச் சுட்டிக்காட்டினாலும், தொடர்ந்து இவ்வாறு குறைத்து மதிப்பிடுவது ‘தேவையற்ற முறையில் நிதியைத் தேக்கி வைக்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்புவதாக அவர் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில், நான்கு ஆண்டுகளில் உபரி நிதி தலா $1 பில்லியனுக்கும் அதிகமாக இருந்து, மொத்தம் $22 பில்லியனை எட்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

“தேவையற்ற வரி விதிப்பு குடும்பங்களின் பணப்புழக்கத்தைப் பாதிக்கிறது. இது மக்களைத் தற்சார்புடன் இருக்க விடுவதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் நிதியுதவியை நம்பி இருக்கும் சூழலை உருவாக்குகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மறுபுறம், இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் யிப் ஹோன் வெங் கூறுகையில், “நமது இருப்பு நிதி என்பது வீணான ஒன்றல்ல. அது நமது இறையாண்மை, மீள்திறன் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் உத்திசார் காப்பீடு,” என்றார். நிதி வலிமை என்பது ஒரு நாட்டை நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் முடிவெடுக்க விடாமல் பாதுகாக்கும் என்று அவர் வாதிட்டார்.

மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி உறுப்பினர் அலெக்ஸ் யாம் சீன மொழியில் பேசுகையில், “உலகம் நிச்சயமற்ற சூழலில் இருக்கும்போது, வல்லரசுப் போட்டிகள் தீவிரமடையும்போது, இத்தகைய உபரி நிதி என்பது ஆடம்பரமல்ல, அது ஒரு காப்பீடு. அடுத்த ‘புயல்’ வரும்போது நாம் அவசரமாகக் கடன் வாங்கவோ அல்லது திடீரென வரிகளை உயர்த்தவோ வேண்டியிருக்காது,” என்றார்.

நிதியமைப்பின் வலுவான நிலையைப் பயன்படுத்தி மக்களுக்குக் கூடுதல் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சிலர் கோரினர்.

திரு யிப் ஹோன் வெங் பேசுகையில், தற்போதைக்கு வரி உயர்வுகளைத் தவிர்த்து நிலைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உபரி நிதியைக் கொண்டு குடும்பங்களின் செலவுச் சுமையைக் குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். குறிப்பாகக் குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படக்கூடாது என்றார்.

வலுவான நிதி நிலையை எதிர்காலத் தயார்நிலை மற்றும் சமூக ஒற்றுமைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டெரன்ஸ் ஹோ தெரிவித்தார். வாழ்க்கைச் செலவு, செல்வ ஏற்றத்தாழ்வு மற்றும் மூப்படையும் மக்கள் தொகை போன்ற சவால்களைச் சுட்டிக்காட்டிய அவர், சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை ‘சமூக ஈவுத்தொகையாக’ மாற்றியமைக்கலாம் என்று பரிந்துரைத்தார். பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது அதன் அளவை உயர்த்தி வழங்கலாம் என்பது அவர் கருத்து.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்வரவுசெலவுத் திட்டம்விவாதம்நாடாளுமன்ற உறுப்பினர்உபரி