வேலை வாய்ப்புகள், செயற்கை நுண்ணறிவு குறித்து அக்கறை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

2 mins read
2f8a1aa4-5b8e-4874-be46-aa9b5910a62e
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பல்வேறு விவகாரங்கள் குறித்து செப்டம்பர் 22ஆம் தேதி பேசினார்கள். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

வேலை வாய்ப்புகள், செயற்கை நுண்ணறிவுக் குறுக்கீடு, பராமரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு ஆகியவை குறித்து திங்கட்கிழமை (செப்டம்பர் 22) நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அக்கறை தெரிவித்தனர்.

வேலை கிடைக்கவில்லை என்றும் பட்டதாரிகளும் ஊழியர்கள் கிடைக்கவில்லை என்று வர்த்தகங்களும் தெரிவிப்பதாக பாசிர் ரிஸ் -சாங்கி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரில் தஹா தெரிவித்தார்.

கற்பிக்கப்படும் திறன்களுக்கும் தேவைப்படும் திறன்களுக்கும் உள்ள வித்தியாசமும் எதிர்பார்ப்புக்கும் உண்மைநிலைக்கும் உள்ள வித்தியாசமும் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்று அவர் கூறினார்.

பட்டதாரி தொழில்துறை பயிற்சித் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

முழுநேர வேலை தேடும் புதிய பட்டதாரிகளுக்குத் தொழில்துறை சார்ந்த அனுபவத்தை வழங்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசிய மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், இளம் சிங்கப்பூரர்கள் நம்பிக்கையுடன் இருக்கும் அதே வேளையில் ஒருவித அமைதியின்மையையும் எதிர்நோக்குவதாகத் தெரிவித்தார்.

வேலை கிடைக்குமா என்ற கவலையுடன் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவியப் பொருளியல் மாற்றங்கள் காரணமாக வேலை இழக்க நேரிடுமா என்ற பதற்றமும் நிலவுவதை கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சருமான திரு தினேஷ் சுட்டினார்.

வேலைகளுடன் இணைக்கும் பாலமாக தாமும் மனிதவள அமைச்சில் தமது சக ஊழியர்களும் செயல்பட்டு தங்களால் முடிந்த அளவுக்கு உதவி நல்க இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

அதுமட்டுமல்லாது, மூத்தோர் மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்களைப் பாதுகாப்பதில் தாம் கவனம் செலுத்த இருப்பதாக அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுக் குறுக்கீடு தொடர்பாக மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் நாடாளுமன்றத்தில் பேசினார்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஆரம்பநிலை வேலைகளும் இதற்கு முன்பு பலனளித்த வேலை தேடும் உத்திகளும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

கல்வியிலும் வேலை வாய்ப்பு தொடர்பான விவகாரங்களிலும் இளையர்களுக்கு ஆதரவு வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மகிழ்ச்சியடையச் செய்கிறது என்று திருவாட்டி டின் தெரிவித்தார். அத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்வேலைசெயற்கை நுண்ணறிவு