மலேசிய-சிங்கப்பூர் தலைவர்களின் 11வது ஓய்வுத்தள சந்திப்பில் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் கலந்துகொள்கிறார்.
இதற்காக, அவர் ஜனவரி 6ஆம் தேதி (திங்கட்கிழமை) மலேசியாவுக்குச் செல்ல உள்ளார். அங்கு அவர் மலேசியப் பிரதமரும் அந்நாட்டின் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிமைச் சந்திப்பார்.
பதினோறாவது ஆண்டாக நடைபெறும் இந்த ஆண்டுக் கூட்டம் இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உதவுகிறது. அத்துடன், மலேசிய-சிங்கப்பூர் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இரு நாடுகளுக்கிடையே தொடர்புகளை வலுப்படுத்த வழிவகை காண இந்தச் சந்திப்பு உதவும் என்று பிரதமர் அலுவலகம் ஜனவரி 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கை, “இரு தரப்பினரிடையே இருக்கும் தீர்க்கப்படாத விவகாரங்களையும் ஆக்கபூர்வமான முறையில், இரு நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல், உறவுகளைக் கையாள்வதில் இருதரப்பினரிடையே இருக்கும் ஒன்றித்த கடப்பாடு ஆகியவற்றைக் கையாளும் முயற்சிகள் தொடரும்,” என்று விவரித்தது.
மலேசியா-சிங்கப்பூருக்கு இடையே அரசதந்திர உறவுகளின் 60ஆம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு குறிக்கிறது.
இந்த ஓய்வுத்தளத்துக்கு ஏற்பாடு செய்யும் மலேசியா முதல் நிகழ்ச்சியாக பிரதமர் வோங்குக்கு ஜனவரி 6ஆம் தேதி இரவு விருந்தளிப்பார். இரு நாட்டு அமைச்சர்களும் மற்ற நாட்டின் சக அமைச்சர்களுடன் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.