தேவைக்கேற்ப சட்டங்களில் மாற்றம் அவசியம்: மூத்த அமைச்சர் லீ சியன் லூங்

தேவைக்கேற்ப சட்டங்களில் மாற்றம் அவசியம்: மூத்த அமைச்சர் லீ சியன் லூங்

2 mins read
14617f2f-aa94-434d-818f-8d1d651b6369
‘சிங்கப்பூரில் 25 ஆண்டுகாலச் சட்டச் சீர்திருத்தம்’ என்ற நூல் தொகுப்பு வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) தேசிய நிர்வாகப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் நூல் தொகுப்பின் தலைமை ஆசிரியருமான பேராசிரியர் யிப் மான், மூத்த அமைச்சர் கா.சண்முகம், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், சட்ட அமைச்சர் எட்வின் டோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

மாறிவரும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஏற்ப சட்ட நடைமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூரில் சட்டம் ஒருபோதும் முற்றுப்பெறும் திட்டமன்று என்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

‘சிங்கப்பூரில் 25 ஆண்டுகாலச் சட்டச் சீர்திருத்தம்’ (25 Years of Legal Reform in Singapore) என்ற நூல் தொகுப்பு செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வெளியீடு கண்டது.

கரையோரப் பூந்தோட்டத்தில் அமைந்திருக்கும் ‘ஃபிளவர் ஃபீல்டு’ மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள், புதிய வகை இணைய மோசடிகள், பொய்த் தகவல்கள் போன்ற புதிய சவால்களை வருங்காலத் தலைமுறையினர் எதிர்கொள்ள வேண்டிவரும் என்றார் அவர்.

“இத்தகைய சவால்களுக்கு ஏற்ப நமது சட்டக் கட்டமைப்புகளைத் தொடர்ந்து மாற்றியமைப்பது அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு நல்ல சட்டக் கட்டமைப்பு நாட்டின் முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் புதிய சவால்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று திரு லீ வலியுறுத்தினார்.

நெருக்கடிக் காலங்களில் விரைவாகச் செயல்பட்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அவசியம் என்றும் அவர் சொன்னார்.

நமது நாட்டின் அனைத்துச் சட்டங்களுக்கும் வழிகாட்டியாகத் திகழும் அரசியலமைப்புச் சட்டமும் காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ அறிவுறுத்தினார்.

“நாம் நமது அரசியலமைப்புச் சட்டத்தைச் சாதாரணமாக மாற்றக்கூடாது. அதே வேளையில், என்றும் மாற்ற முடியாத ஒன்றாகக் கருதவும் கூடாது,” என்று அவர் சுட்டினார்.

திறம்பட நிர்வகிப்பதற்கான அடிப்படையை வழங்கவும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த மாற்றம் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்பில் உள்ள முக்கிய பலவீனங்களைக் களைவதற்காக, கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களையும் திரு லீ பட்டியலிட்டார்.

“இறுதியில் சட்டம் சமூகத்தையே சார்ந்திருக்கிறது,” என்று குறிப்பிட்ட மூத்த அமைச்சர், குடிமக்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகள் ஆகிய அனைத்துத் தரப்பினரின் புரிந்துணர்வும் ஆதரவும் சட்டத்தின் செயல்பாட்டிற்கு அவசியம் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு தலைமுறையும் சட்ட அமைப்பை வலுப்படுத்தி, காலத்தின் தேவைக்கேற்ப புதுப்பித்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த 25 ஆண்டுகளில் சிங்கப்பூர் எவ்வாறு இத்தகைய சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்பதை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட நூல் தொகுப்பு விவரிக்கிறது.

அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சட்டங்கள் மூத்த அமைச்சர் லீ பிரதமராக இருந்த காலத்தில் இயற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சட்டம்மூத்த அமைச்சர்அரசாங்கம்