சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்களான லீ கிம் டா, வோ ஹப் ஆகியவை இந்தியாவில் தொடங்கிய கூட்டு நிறுவனத்தின் தொடர்பில் அவற்றுக்கிடையே நீண்டகாலமாக சர்ச்சை தொடர்கிறது.
அந்த விவகாரத்தில் இப்போது புதிய பிரச்சினை எழுந்துள்ளது. தவறான நடத்தையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
எல்&டபிள்யு லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஆசைத்தம்பி மாணிக்கம், பெங்களூரில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளார். அந்நடவடிக்கை, நீதிக்கு ஏற்றவாறு எடுக்கப்படவில்லை என்பது அவரின் வாதம்.
பணிநீக்கம் செய்த பிறகு மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். நிறுவன இயக்குநராகத் தனது பணிகளைத் தொடர்வதற்குத் தனக்கு சட்டபூர்வமாக உரிமை உள்ளது என்று நீதிமன்றம் மறுவுறுதிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் எல்&டபிள்யு இயக்குநர்கள் டியோ ஹாங் பூன், யூஜீன் யோங் ஆகியோரும் சிங்கப்பூரில் இயங்கும் அதன் தலைமை நிறுவனமான லீ கீம் டா-வோ ஹப் பிரைவேட் லிமிடெட்டும் பதிலளிக்கவேண்டும் என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும்.

