உரிய மத்திய சேம நிதி நிலுவைத் தொகைகள் அனைத்தும் முழுமையாகச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ‘கோமளாஸ்’ உணவகத் தொடருடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகள் சமரசம் செய்யப்பட்டதாகப் புதன்கிழமை (நவம்பர் 25) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
‘கோமளாஸ் பிரைவேட் லிமிடெட்’ (Komala’s Pte Ltd), ‘கோமளாஸ் எஃப் அண்ட் பி என்டர்பிரைசஸ்’ (Komala’s F&B Enterprises) ஆகிய இரு நிறுவனங்களும் தலா 10 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டன.
அனைத்துத் தொகைகளும் செலுத்தப்பட்டு வழக்குகள் சமரசம் செய்யப்பட்டதால், இரு நிறுவனங்கள் மீதான மொத்தம் 20 குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுவதும் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இரு நிறுவனங்களின் பிரதிநிதியாகக் கோமளாஸ் இயக்குநர் ராஜூ தனசேகரன் நீதிமன்றத்தில் முன்னிலையானார். இவ்வழக்குகள் தனித்தனியாகப் பட்டியலிடப்பட்டிருந்தன.
புதன்கிழமை பெறப்பட்ட வணிக விவரங்களின்படி, இவ்விரு நிறுவனங்களும் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன. 1997ல் தொடங்கப்பட்ட ‘கோமளாஸ்’ உணவகங்கள், தயார்நிலை உணவுத் தயாரிப்பிலும், 2001ல் தொடங்கப்பட்ட ‘கோமளாஸ் எஃப் அண்ட் பி என்டர்பிரைசஸ்’ உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. ரேஸ் கோர்ஸ் ரோடு, ஃபெர்ன்வேல் லிங்க், ஆன்சன் ரோட்டிலுள்ள இன்டர்நேஷனல் பிளாசா, ஈசூன் சென்ட்ரல், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்களில் இதன் கிளைகள் உள்ளன.
லிட்டில் இந்தியாவில் உள்ள ‘கோமள விலாஸ்’ உணவகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள சூழலில் இவ்விசாரணை நடைபெற்றுள்ளது. 1947ல் திரு முருகையா ராஜூ நிறுவிய கோமள விலாஸ், 2015ல் அப்போதைய பிரதமர் லீ சியன் லூங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரையும் வரவேற்ற பெருமைக்குரியது.
திரு ராஜூவின் மகன் திரு ராஜூ தனசேகரன் தலைமையில் கோமளாசும், பேரன் திரு ராஜகுமார் குணசேகரன் தலைமையில் கோமள விலாசும் தனித்தனி இணையத்தளங்கள், உணவுப் பட்டியல்களுடன் இயங்கி வருகின்றன.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த 76-78 சிராங்கூன் ரோடு கோமள விலாஸ் கிளையை, ‘இஷ்தாரா ஜுவல்லரி’ நிறுவனம் அக்டோபரில் கையகப்படுத்தியுள்ளது.
