தனது கட்சிக்காரரின் பணத்தைக் கையாடல் செய்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கறிஞர் தனராஜ் ஜேம்ஸ் செல்வராஜ்மீது வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
61 வயதான அவர், இக்குற்றத்தை 2020ஆம் ஆண்டும் மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் 4,000 வெள்ளியைத் தனது சொந்தச் செலவுக்கு அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தனராஜ், மற்றொரு நபரான 30 வயது டேவிட் ராஜ் டேனியல் கிருஷ்ணனுடன் சட்டவிரோத ஒப்பந்தம் ஒன்றைச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
தனது கட்சிக்காரரான பாதிக்கப்பட்ட நபருக்குப் பிணை வழங்கும்போது அதற்கு உத்தரவாதமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சொத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈட்டை டேவிட்டிற்கு வழங்க தனராஜ் ஒப்புகொண்டதாகக் கூறப்படுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ், இதுபோன்று ஒப்பந்தம் செய்துகொள்வது குற்றமாகும்.
பாதிக்கப்பட்டவரின் வழக்குப் பற்றிய விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை. மேலும், தனராஜ், டேவிட், பாதிக்கப்பட்டவர் ஆகிய மூவரும் எவ்வாறு ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பது பற்றிய விவரங்களும் அதில் குறிப்பிடவில்லை.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் வழக்கறிஞராகச் செயல்படும்போது நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டும் தனராஜ்மீது சுமத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கணக்கு, பெருநிறுவன ஒழுங்குமுறை ஆணையத்திடம் நடத்திய விசாரணையில், ஜேம்ஸ் செல்வராஜ் சட்ட நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் வழக்கறிஞர் தனராஜ் செயல்பட்டது தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
இருப்பினும், செப்டம்பர் 27ஆம் தேதி சட்ட அமைச்சின் இணையதளத்தில் தனராஜ் குறித்தத் தகவல்களைத் தேடியபோது அவரது விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் அது தெரிவித்தது.
‘ஸ்ட்ராட்ஃபர்ட்’ எனப்படும் நிறுவனத்தில் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருக்கும் டேவிட் தற்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு ஒன்றையும் எதிர்நோக்கிகிறார்.
தனராஜுடன் சட்டவிரோத ஒப்பந்தத்தில் ஈடுபட்டத்துடன், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான $10,000 பிணைத் தொகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் டேவிட்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனராஜ், டேவிட் ஆகியோரின் வழக்குகள் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.


