கடந்த 2024ஆம் ஆண்டு தங்கள் மகனின் மரணம் தொடர்பான வழக்கில் ஒரு தம்பதிக்கு அதைக் கையாண்ட வழக்கறிஞர் அதிகக் கட்டணம் விதித்தது கண்டறியப்பட்டது.
அவர், வேறொரு வழக்கிலும் அதேபோன்று அதிகக் கட்டணம் பெற்றது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அவ்வழக்கில், ‘த பியூட்டி’ என்ற அழகு நிலையத்தின் சார்பாக ‘ஆர்பிட்டர்ஸ் இங்க்’ எனும் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய் குமார் ராய் முன்னிலையானார்.
மற்ற ஊழியர்களைத் தமக்கு இலவசமாகச் சேவை வழங்க வற்புறுத்தியதற்காகவும் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடியதற்காகவும் முன்னாள் ஊழியர் ஒருவர்மீது தொடரப்பட்ட வழக்கு அது.
2023ஆம் ஆண்டில் ஏழு மாத காலத்திற்குத் தான் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைக்காகத் தமது கட்சிக்காரரிடமிருந்து திரு ராய் 108,225 வெள்ளியைக் கட்டணமாக வசூலித்தார்.
மேற்குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்றத்தில் அவ்வழக்குத் தொடர்பில் விசாரணை நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிமன்றத்தை அணுகிய அந்த அழகு நிலையம், வழக்கறிஞர் விதித்த கட்டணத்தை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
அவர்களின் கோரிக்கையை மாவட்ட நீதிபதி ஏற்றுகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதனை எதிர்த்து அந்தச் சட்ட நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அழகு நிலையம் தொடர்புடைய வழக்கில் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் அதற்காக நிறையை பணிகளை மேற்கொண்டதாகவும் திரு ராய் வாதிட்டார்.
அவரின் வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி, திரு ராய் குறிப்பிட்டதைப் போன்று அவ்வழக்கில் எந்தவொரு சிக்கலும் இல்லை எனக் கூறி, 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திரு ராயின் சட்ட நிறுவனம் விதித்த கட்டணத்தை மதிப்பீடு செய்த அரசு நீதிமன்றத் துணைப் பதிவாளர், அதனை $108,225லிருந்து $46,000ஆகக் குறைத்தார்.
அதற்கு ஒப்புகொள்ளாத ‘ஆர்பிட்டர்ஸ் இன்க்’, அக்கட்டணத்தை நீதிமன்றம் மதிப்பாய்வு செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதிப்பாய்வு மனுவை விசாரித்த நீதிபதி கட்டணத்தை மேலும் $34,000ஆகக் குறைத்து உத்தரவிட்டார்.

