பகலில் வழக்கறிஞர், மாலையில் இசைக்கலைஞர்

4 mins read
227b0357-f93a-413a-a532-5b608c628a71
2023 தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பாடிய ஜெயே‌ஷ் (இடமிருந்து மூன்றாவது). - படம்: ‘தீவின் குரல்கள்’

இலக்குகள் பெரும்பாலும் நேர்த்தியான உடை, கணினிச் செயல்பாடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் நிலையிலும், தமது பகல்நேரப் பணியைத் தொடர்ந்து இசையைத் தமது தொழிலாகவும் அடையாளமாகவும் கருதுகிறார் திரு ஜெயே‌ஷ் மெல்வானி, 27.

பரபரப்பான உலகில் பகல்நேரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் ஜெயேஷ், மாலை நேரத்தில் வேறோர் அவதாரமெடுக்கிறார். ‘தீவின் குரல்கள்’ (The Island Voices) எனும் இசைக்குழுவில் முக்கிய இசைக்கலைஞராகப் பயணம் செய்கிறார் இவர்.

‘கேப்பெல்லா’ எனும் இசைக்கருவிகள் இல்லாமல் பாடும் பாணியில் அமைந்த இக்குழு கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி தேசிய தின நிகழ்ச்சிகளின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. அக்குழுவில் ‘பாரிடோன்’ எனப்படும் உச்ச வரம்புக்கும் தாழ்வான வரம்புக்கும் இடையிலான மத்திய வரம்புடைய குரலில் பாடும் இசைக்கலைஞராக உள்ள ஜெயே‌ஷ், அக்குழுவில் இணைந்து செயல்படும் ஒரே இந்திய இசைக் கலைஞராவார்.

ஜெயே‌ஷ் மெல்வானி.
ஜெயே‌ஷ் மெல்வானி. - படம்: ‘தீவின் குரல்கள்’

கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய தினக் கொண்டாட்டம் 2022க்கான இசை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப சில பாடகர்களும் நண்பர்களும் ஒன்றிணைந்ததன் விளைவாக இக்குழு தொடங்கப்பட்டது.

குழுவில் இணைய குறிப்பிட்ட வரம்பில் குரல் கொண்ட, தமிழில் பாடும் கலைஞரைத் தேடிக்கொண்டிருந்த நிறுவனர் ஓவன் லீக்குத் தம் நண்பர் மூலம் ஜெயே‌ஷின் அறிமுகம் கிடைத்தது.

“குழுவில் ஓவனுக்குத் தெரியாத ஒரேயொருவர் நான்தான். எனினும், எனக்கு வாய்ப்பளிக்கலாம் என்று அவர் கருதினார்,” என்று நினைவுகூர்ந்தார் ஜெயே‌ஷ்.

இக்குழு தொடக்கத்தில் கொண்ட நோக்கத்தைத் தாண்டி வளரத் தொடங்கியது. யூடியூப் தளத்தில் பிரபலமடைந்த அவர்களின் ‘மா‌‌ஷப்’ பாடல்கள், தைவான் முதல் ஆஸ்திரியா வரையிலான அனைத்துலக ‘கேப்பெல்லா’ வகைப் போட்டிகளில் பங்கேற்பு ஆகியவை பன்முகத்தன்மை கொண்ட சிங்கப்பூர்ச் சமூகத்தில் சிறந்த இசைக்குழுக்களில் ஒன்றாக அக்குழுவின் இடத்தை உறுதிசெய்தன.

தமது இந்தியப் பாரம்பரியக் கூறுகளை, நுட்பமான ஒத்திசைவுகள், தாளங்கள்மூலம் ஒட்டுமொத்தக் கூட்டு இசைக்கோப்பில் ஒன்றிணைத்துள்ளார் ஜெயே‌ஷ்.

‘தீவின் குரல்கள்’ இசைத்தொகுப்பின் அடிநாதத்தில் பாப், ‘ஆர்&பி’ இசை வகைகளுடன் இந்திய இசைக்கும் தனியிடம் இருப்பதை அவர் குறிப்பிட்டார். ஒவ்வோர் இசை வடிவத்தின் சிறப்பம்சங்களை இணைத்து ஒட்டுமொத்தக் கோப்பை மேம்படுத்த முடிவதாகவும் அவர் சொன்னார்.

“இந்த அம்சத்தை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை,” என்ற அவர், “குறிப்பாக அனைத்துச் சமூகத்தினருக்கும் இந்தியப் பண்பாட்டின் ஒரு பகுதியைக் குறித்து அறிந்துகொள்ள உதவும் என்பது கூடுதல் சிறப்பு,” என்றும் கூறினார்.

சிறுவயதிலிருந்து தமிழில் பேசிப் பழக்கம் இல்லாததால், உச்சரிப்பு நுணுக்கங்களைச் சரியான முறையில் கற்க நன்கு தமிழ் பேசும் நண்பர்களின் உதவியை நாடியதாகவும் சொன்னார். பண்பாட்டின் கூறுகள் குறித்து ஆழமாக அறியவும் அது உதவியதாகக் குறிப்பிட்டார்.

இவை அக்குழுவினருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் ‘முன்னேறு வாலிபா’ பாடலைப் பாடவும், 2024ஆம் ஆண்டு அதிகாரபூர்வப் பாடலான ‘சிங்கை நாடு’ பாடலை வெளியிடவும் வாய்ப்பளித்தது. உள்ளூர் இசைக்கலைஞர் ஷபீர் சுல்தான் இசையமைத்துப் பாடிய சிங்கை நாடு பாடல், சிங்கப்பூருக்கு அப்பாலும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

“ஜெயே‌ஷும், ‘தீவின் குரல்கள்’ குழுவினரும் பாடலின் அடிப்படை உணர்வை வைத்துக்கொண்டு, அதற்குப் புத்துயிரூட்டினர். தேசத்திற்கு நம் சமூகத்திலிருந்து இவ்வகை பங்களிப்பைச் செய்ய முடிவதில் மகிழ்ச்சி. கடந்த 2012ஆம் ஆண்டு அப்பாடலை நான் வெளியிட்டபோது அது புகழ்பெறும் என எதிர்பார்க்கவில்லை. அப்போதைய தேசிய தினக் கொண்டாட்டங்களின் பகுதியாக அதில் இடம்பெறவில்லை. இது என் தேசத்துக்கு நான் எழுதிய காதல் கடிதம்,” என்றார் இசைக்கலைஞர் ‌‌ஷபீர்.

தேசிய தின அணிவகுப்புக்கான ஒத்திகைகள் குறித்துப் பகிர்ந்த ஜெயே‌ஷ், “அது உடல், மனவுறுதிக்கான சவால். கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 12 மணிநேரம் ஒத்திகை செய்தோம். காலை 10 மணிமுதல் சிகை அலங்காரம், ஒப்பனை உள்பட பல்வேறு முறை பயிற்சி மேற்கொண்டோம்,” என்றார்.

பொதுவாக ஜனவரி மாதம் இசைப்பதிவு அமர்வுகளுடன் தொடங்கி மார்ச் மாதம்வரை தயாரிப்புப் பணிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மே மாதம் ஒத்திகைகள் தீவிரமடையும். தொடக்கப் பள்ளிப் பார்வையாளர்களுடன் நடத்தும் நிகழ்ச்சிகள் தனி உற்சாகமளிக்கும் என்றும் அவர்கள் காட்டும் உற்சாகத்தையே தேசிய தின அணிவகுப்பில் கொணர முயல்கிறோம் என்றும் சொன்னார் ஜெயே‌ஷ்.

இவ்வாண்டு தேசிய தினப் பாடலான ‘ஹியர் வி ஆர்’ இசைக் காணொளியில் இக்குழு இடம்பெற்றுள்ளது.

படப்பிடிப்பு நாள்களை நினைவுகூர்ந்த ஜெயே‌ஷ், “நான் சிறுவயதில் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த சிறந்த இசைக் காணொளிகளைப் படைத்த மாபெரும் இசைக்கலைஞர்களுடன் தோள் உரசி, ஒரே திரையைப் பகிரும் வாய்ப்பு கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி,” என்றார். குறிப்பாக, கி சானின் தேசிய தினப் பாடலான ‘ஹோம்’, இன்றளவும் மறக்கமுடியாத, தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பதாகவும் இவர் நம்புகிறார்.

தேசிய அரங்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் நுட்பமான பணி சற்றே அழுத்தம் கொடுத்தாலும், அப்பணியைச் சுமப்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார் ஜெயே‌ஷ்.

“இது ஒரு பெரும்பொறுப்பு. எல்லை தாண்டிய கலைநயத்தைக் காட்ட விரும்பும் அதே நேரத்தில், அது வெளிக்கொணரும் பிம்பத்தின்மீது கவனமாக இருப்பது அவசியம்,” என்றும் அவர் சொன்னார்.

இவற்றைச் சமநிலைப்படுத்தும் முக்கிய அம்சம் அவர்கள் உருவாக்கும் இசைதான். பண்பாட்டுக் கூறுகளையும் நவீன அடையாளங்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படும் இசை அச்சமநிலையை எட்ட வழிவகுக்கிறது.

குறிப்புச் சொற்கள்