சிங்கப்பூரை உலுக்கிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10 வெளிநாட்டவர்களில் ஒருவருடன் உடந்தையாக இருந்தவரோடு தொடர்புடைய விவகாரத்தில், போலி ஆவணம் தயாரித்ததாகச் சொத்துரிமை மாற்று வழக்கறிஞர் ஒருவர்மீது வியாழக்கிழமை (ஜூலை 16) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
2023 டிசம்பர் 14ஆம் தேதிவாக்கில், சென் லிங்லிங் என்ற பெயரைக் கொண்ட நபரால் கையெழுத்திடப்பட்ட போலி ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு, லிம் லாய் ஹொங் என்பவருக்கு வழக்கறிஞர் சான் ஐ-ஃபெய் ஜூலியா, 61, உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
எண் 28 பீச் ரோட்டில் உள்ள ‘சவுத் பீச் ரெசிடென்சஸ்’ குடியிருப்பில் சென் சொத்து வாங்கிய விவகாரத்துடன் இந்த ஆவணம் தொடர்புடையதாகும்.
லிம், சென் இருவர் குறித்த கூடுதல் விவரங்கள் எவையும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
இந்தப் பணமோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10 வெளிநாட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களில் ஒருவராக சென் ஏற்கெனவே அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டவர் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
வணிக ரீதியிலான அசையாச் சொத்துகளைக் கொண்டுள்ள பல நிறுவனங்களில் சென் பங்குதாரராக இருந்துள்ளார். நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள நான்கு மாடிக் கடைவீடு ஒன்றும் அதில் அடங்கும். அது $42 மில்லியனுக்கு விற்கப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது.
ஸ்டெர்லிங் லா சட்ட நிறுவனத்தின் இயக்குநரான சான் மீதான இந்த வழக்கு, ஆகஸ்ட் 13ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
பணமோசடி வழக்குடன் தொடர்புடைய சொத்துகளை வாங்குவதில் நிகழ்ந்த பணமோசடி தடுப்பு விதிமீறல்களுக்காக, நான்கு சட்ட நிறுவனங்கள் மற்றும் ஒரு வழக்கறிஞர்மீது 2025ல் சட்ட அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

