முன்னாள் வழக்கறிஞர் ரவி மாடசாமியுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக அவரது நண்பர் மீது வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
போதைப்பொருள் சோதனை முடிவுக்காகவும் கண்காணிப்பு கேமராக் காட்சிகளை மீட்பதற்காகவும் வழக்கை ஒருவார காலத்திற்கு ஒத்தி வைக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து 2026 ஜனவரி 2ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை (டிசம்பர் 24) மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 56 வயது ரவி உயிரிழந்தார்.
இதன் தொடர்பில் காவல்துறையும் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் முதற்கட்ட விசாரணை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. புதன்கிழமை அதிகாலை 5.41 மணியளவில் அப்பர் பூன் கெங் ரோட்டில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அவசர உதவி கேட்டு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து குடிமைத் தற்காப்புப் படையின் அவசர வாகனம் அங்கு விரைந்தது.
சுயநினைவின்றி காணப்பட்ட எம். ரவிக்கு உதவி தேவைப்பட்டதால் அவர் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எம். ரவியின் மரணம் இயற்கைக்கு மாறாக இருந்ததால் காவல்துறை விசாரணையில் இறங்கியது. அதே வீட்டில் இருந்த ரவியின் நண்பரான 40 வயது சிங்கப்பூரர் ஷான் லூ கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சந்தேகத்திற்கிடமான போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்காக ஷான் லூவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வீட்டிலிருந்து சில போதைப் பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 2023ஆம் ஆண்டிலிருந்து இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தது தெரிய வந்துள்ளதாகக் கூட்டு அறிக்கை குறிப்பிட்டது.
சம்பவ நாளான டிசம்பர் 24ஆம் தேதி, வீட்டில் போதைப் பொருளை உட்கொள்வதற்காக இருவரும் சந்தித்ததாக லூ தெரிவித்துள்ளார். ரவி, லூ இருவரிடமும் போதைப் பொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இதர சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ரவி அசைவற்றுக் கிடந்ததால் குடிமைத் தற்காப்புப் படையை அழைப்பதற்கு முன்பு அவருக்கு உயிர்காப்பு சிகிச்சை (சிபிஆர்) செய்ததாக நண்பர் லூ விசாரணையில் கூறினார்.
முழு விசாரணைக்குப் பிறகு மரண விசாரணை அதிகாரியிடம் காவல்துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு மரண விசாரணை அதிகாரி, எம். ரவியின் மரணத்திற்கான காரணத்தை முடிவு செய்வார்.

