தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங் தனித்தொகுதியில் மசெக வேட்பாளராக வழக்கறிஞர் மார்‌‌ஷல் லிம்

3 mins read
b68a46e9-0fa8-4d9d-bbdd-cbd79b1e6115
பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பொது, தனியார் துறைகளில் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ள திரு மார்‌‌ஷல் லிம், ஹவ்காங் தனித்தொகுதியின் மக்கள் செயல் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். - படம்: ரவி சிங்காரம்

வரும் பொதுத் தேர்தலில் ஹவ்காங் தனித்தொகுதியில் வழக்கறிஞர் மார்‌‌ஷல் லிம், 38, மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, 1991ஆம் ஆண்டு முதல், எதிர்க்கட்சியின் பிடியிலிருக்கும் ஹவ்காங் தனித்தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் அவர் களமிறங்கியுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி அவர் ஹவ்காங் தனித்தொகுதியின் மசெக கிளைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவருக்கு முன்பு, திரு ஜேக்சன் லாம், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பொது, தனியார் துறைகளில் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் திரு லிம்முக்கு உண்டு. தற்போது அவர் உள்ளூர் நிறுவனமான ‘மார்ட்டின் அண்ட் பார்ட்னர்ஸ்’சில் பங்காளித்துவம் வகிக்கிறார்.

பொதுத் துறையைப் பொறுத்தவரை, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் அரசாங்கத் துணை வழக்கறிஞராகவும் (Deputy Public Prosecutor) பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தில் பிரதிவாதி அரசாங்கத் தலைமை உதவி வழக்கறிஞராகவும் (Assistant Chief Public Defender) அவர் பணியாற்றினார்.

பிரதிவாதி அரசாங்கத் தலைமை உதவி வழக்கறிஞராக, அவர் மரண தண்டனை விதிக்கப்படவியலாத குற்றங்களுக்குச் சட்ட உதவி வழங்கினார். வழக்கறிஞர் சேவைக்குக் கட்டணம் செலுத்த முடியாதோருக்கு இலவசமாக வாதாடினார்.

“நான் ஒரு போராளி. நீதிமன்றத்தில் நான் வழக்கறிஞராக இத்தனை ஆண்டுகள் வெளிப்படுத்திய போராட்ட உணர்வைச் சமூக நலனுக்காகவும் பயன்படுத்த விரும்புகிறேன். அதே போராட்ட உணர்வை நான் ஹவ்காங் மக்களிடத்திலும் காண்கிறேன்,” என்றார் திரு லிம்.

“சிங்கப்பூர், நம் குடும்பங்கள், சமூகம் மீதான அக்கறையினால் சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைப்பதற்காகக் குற்றவாளிகள் அவர்களின் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும்படிச் செய்தேன்.

“ஆனால் நாளடைவில் குற்றவாளிகளை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினேன். சிலர் பெரும் தவறிழைத்திருந்தனர். சிலர் க‌ஷ்டப்பட்டனர். சிலர் கடுமையான பின்னணிகளிலிருந்து வந்தனர். அனைவரும் செவிசாய்க்கப்படுவதற்கு வாய்ப்பு பெற வேண்டும் என நம்பினேன்,” என்றார்.

பலதரப்பட்டோரின் வாழ்க்கைச் சூழல்களையும் தாம் புரிந்துகொண்டதாகக் கூறினார் திரு லிம்.

“மனநலப் பிரச்சினைகள் இருந்தவர்களுக்காக வாதாடியுள்ளேன். க‌ஷ்டமான சூழலில் இருந்தோருக்கும் வாதாடியுள்ளேன்.

“ஓர் இளம் தாயார் வாழ்வில் தவறான தீர்மானங்களை எடுத்தார். ஆனால் அவர் சிறையில் இருந்தால் சிறுவர்கள் தாயார் இல்லாமல் வளர்வார்கள். நான் அதை விரும்பவில்லை. எனவே இரண்டாம் வாய்ப்பளிக்குமாறு வாதாடி வென்றேன்.

“குண்டர் கும்பலில் ஓர் இளையர் சேர்ந்தார். அவர் சிறைக்குச் செல்லாமலிருக்கப் போராடினேன். இதுபோல் எத்தனையோ வழக்குகள்மூலம் சமூகத்தினர் மீதான பரிவும் புரிந்துணர்வும் என்னிடத்தில் கூடியது,” என்றார் திரு லிம்.

மற்ற சமூக நடவடிக்கைகளிலும் திரு லிம் ஈடுபட்டுள்ளார். சட்டத் துறையினரின் ‘ப்ரோ போனோ சேவை’களின் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ‘புரோஜெக்ட் ஸ்கூல்ஸ்’ எனும் திட்டம்வழி சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இராணுவ நீதிமன்றங்களிலும் அவர் இலவசச் சட்ட உதவி வழங்கினார். சட்டத்துறையினரின் பல்வேறு செயற்குழுக்களிலும் உறுப்பினராக இருந்தார்.

“ஹவ்காங் வரலாறு எனக்குத் தெரியும். ஆனால் அது எனக்கு முட்டுக்கட்டையன்று. ஒவ்வொரு பொதுத் தேர்தலும் புதிய ஒரு தொடக்கம்,” என வலியுறுத்தினார் திரு லிம்.

ஹவ்காங் தனித்தொகுதியின் எல்லைகள் இந்தப் பொதுத் தேர்தலில் மாற்றப்படவில்லை. அதில் 29,433 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேசியச் சராசரியைவிட அங்கு 21 முதல் 45 வயது வரையிலான இளம் வாக்களிப்பாளர்கள் அதிகம் எனப் புள்ளிவிவரத் துறை அறிக்கையின் அடிப்படையிலான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆய்வு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்