வேலைப்பளுவால் மனவுளைச்சலுக்கு ஆளான வழக்கறிஞர் ஒருவர் போலி மருத்துவ ஆவணங்களைத் தயார்செய்திருக்கிறார்.
பானுப்பிரியா ரவிச்சந்திரன் எனும் வழக்கறிஞரின் சேவைகளை நாடிய ஆடவர்கள் இருவர், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவரின் விவகாரங்களைக் கையாள வகைசெய்யும் ‘டெப்யூட்டிஷிப்’ விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்களுடன் சேர்க்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் காலாவதியானதை பானுப்பிரியா உணர்ந்திருக்கிறார்.
புதிய மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு தனது கட்சிக்காரர்களைக் கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக பானுப்பிரியா, தானே அந்த அறிக்கைகளைத் தயார்செய்தார். அவை குடும்ப நீதிமன்றங்கள் தயார்செய்ததாகத் தெரியப்படுத்தினார். பின்னர் பானுப்பிரியாவின் கட்சிக்காரர்களான அந்த இரு ஆடவர்களும் அந்தப் போலி அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.
மேலும், வேறு விவகாரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) சமர்ப்பிக்கவேண்டிய ஆவணம் ஒன்றையும் பானுப்பிரியா போலியாத் தயார்செய்திருக்கிறார்.
34 வயது பானுப்பிரியாவுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 2) ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் புரிந்தபோது அவர் கே கே லீ சட்ட நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சிங்கப்பூரரான அவரின் தகவல்கள் சட்ட அமைச்சின் இணையத்தளத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) காணப்படவில்லை.
மருத்துவ அறிக்கைகள் காலாவதியாகவிருந்தால் புது அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு பானுப்பிரியா கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் வோங் ஷியாவ் யின் வலியுறுத்தினார்.