வழக்கறிஞர்கள் செழித்தோங்க வலுவான நிபுணத்துவம், வளமான மின்னிலக்கத் திறன் அவசியம்: சட்ட அமைச்சர்

வழக்கறிஞர்கள் செழித்தோங்க வலுவான நிபுணத்துவம், வளமான மின்னிலக்கத் திறன் அவசியம்: சட்ட அமைச்சர்

2 mins read
4dc86082-e7a1-4072-a5e6-2c1cff21ee9a
சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்காலத்தில் செழித்தோங்க விரும்பும் வழக்கறிஞர்கள், வலுவான சட்ட நிபுணத்துவத்துடனும் மின்னிலக்கத்திறனுடனும் திகழ்வது அவசியம் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட வல்லுநர்கள் பணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கத் திரண்டிருந்த வழக்கறிஞர்கள், சட்ட நிறுவன ஆலோசகர்கள், கல்வியாளர்கள், சட்ட மாணவர்கள் உட்பட சட்ட சமூகத்தைச் சேர்ந்த 850க்கும் மேற்பட்டோர் மத்தியில் உரையாற்றினார் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங்.

வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அன்று ஆற்றிய உரையில், செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள சட்டபூர்வமாக வலுவாகவும், மின்னிலக்கச் செயலாற்றலில் சரளமாகவும் வழக்கறிஞர்கள் இருக்கவேண்டும். சட்டப்பணியில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான இடையூறுகளில் செயற்கை நுண்ணறிவும்  ஒன்றாகும் என்றார் அவர்.

ஏறத்தாழ 44 விழுக்காடு சட்டப் பணிகளைச் செயற்கை நுண்ணறிவு மூலம் தானியக்கமயமாக்க முடியும் என்றும் அவற்றால் இதனை விரைவாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ‘ஏஐ’ செய்ய முடியாத அம்சங்களில் வழக்கறிஞர்கள் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

“வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை உருவாக்க ‘ஏஐ’ ஆல் முடியாது. தார்மிகப் பொறுப்பைக் கையாள்வதற்கும் அதற்கு இயலாது.

‘‘மதிநுட்பத்துடன் வாதிட முடியாது. ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கவும் முடியாது. மேலும், மனிதர்களைப் போல ‘ஏஐ’ பொறுப்பேற்றுக்கொள்ளாது,’’ என்றும் குறிப்பிட்டார் திரு டோங்.

“இதன் பொருள், நெறிமுறை பகுத்தறிவு, இரக்கத்துடனான வாடிக்கையாளர் ஈடுபாடு, தெளிவற்ற சூழ்நிலைகளில் தீர்ப்பு வழங்குதல், மேலும் சில வேளைகளில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்க விரும்பாத ஒன்றைச் சொல்லும் தார்மிகத் துணிவை வளர்த்துக்கொள்ள வழக்கறிஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகும்,” என்றும் விளக்கினார் திரு டோங்.

குறிப்புச் சொற்கள்