சிங்கப்பூரின் கேபிட்டாலேண்ட் முதலீட்டு நிறுவனம் அதன் சீன சந்தையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2025ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினரை அந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கையால் 365 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆசியாவின் ஆகப்பெரிய பொருளியலாக உள்ள சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகச் சொத்து சந்தையில் போதுமான அளவு முன்னேற்றம் இல்லை. இதன் காரணமாகச் சொத்து மேலாளர்கள் பலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டு தரவுகளின்படி கேபிட்டாலேண்ட் நிறுவனத்தில் 9,542 பேர் வேலை செய்கின்றனர். 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 10,158ஆக இருந்தது.
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு குறைவான ஊழியர்களை கேபிட்டாலேண்ட் கொண்டிருப்பது இதுவே முதல்முறை.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 33 விழுக்காட்டினர் சீனாவைச் சேர்ந்த ஊழியர்கள். 2024ஆம் ஆண்டு அது 35 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரில் ஊழியர்கள் எண்ணிக்கை 24 விழுக்காடாக உள்ளது.
இந்தியாவில் தனது செயல்பாட்டை கேபிட்டாலேண்ட் விரிவுபடுத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்து விழுக்காடாக இருந்த இந்திய ஊழியர்கள் இப்போது ஆறு விழுக்காடாக அதிகரித்துள்ளனர்.

