தொகுதியின் வளர்ச்சிக்கு சமூகத்துடன் பணிபுரியும் தலைவர்கள் முக்கியம்: மசகோஸ்

2 mins read
88851de8-d347-482b-b632-7044e66169b9
தமது வேட்பாளர் அணியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: எஸ்பிஎச்

மக்கள் செயல் கட்சியின் (மசெக) தெம்பனிஸ் அணி முந்தைய மசெக தெம்பனிஸ் அணிகளின் நற்பணிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறினார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி.

ஏப்ரல் 30ஆம் தேதி மாலை ‘தெம்பனிஸ் கிரீன்கோர்ட்’ வளாகத்தில் பிரதமருடன் குடியிருப்பாளர்களைச் சந்தித்தபின் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறினார் அமைச்சர் மசகோஸ்.

“மசெக அணி என்றுமே தெம்பனிசைத் தலைமைவகிக்கும் நகராக உருவாக்கியுள்ளது.

“சிங்கப்பூரில் பல நடுவங்கள் உள்ளன. ஆனால், தலைசிறந்த நடுவம் ‘அவர் தெம்பனிஸ் நடுவம்’ என பலரும் ஒப்புக்கொள்வார்கள். இதற்குக் காரணம் அரசாங்க அமைப்புகள் வந்து அனைத்தையும் செயல்படுத்தியது மட்டுமல்ல, குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் செவிசாய்த்தோம் என்பதும்கூட.

“வடிவமைப்பு முடிந்தபின்பும் குடியிருப்பாளர்களின் விருப்பங்களை உட்புகுத்த முயன்றோம். உதாரணத்துக்கு, நடுவத்தின் அடித்தளத்தில் உருட்டுப் பந்து தளம் இருப்பது இதனால்தான்,” என்றார் அமைச்சர் மசகோஸ்.

நகரத் திட்டமிடுதலையும் தாண்டி, சமூகத்தோடு இணைந்து பணியாற்றும் தலைவர்கள் எவ்வாறு மேம்பட்ட பலன்களை வழங்குவர் என்பதற்கு இது எடுத்துக்காட்டு என்றார் அவர்.

“இனி நாம் தெம்பனிசை முன்னுதாரண நகராக்க விரும்புகிறோம். இந்த நகரைச் சுற்றி நாம் பேருந்து நிலையம், குறுக்குத்தீவு ரயில் பாதை ஆகியவற்றை உள்ளடக்கும் தெம்பனிஸ் நார்த் ஒருங்கிணைந்த மையம் போன்றவற்றைக் கட்டவுள்ளோம். புதிய பள்ளிவாசலையும் அமைப்போம்,” என்றார் அமைச்சர் மசகோஸ்.

இதுவரை தெம்பனிஸ் நகர மன்றத் தலைவராக இருந்துள்ள வடகிழக்கு மாவட்ட மேயர் டெஸ்மண்ட் சூ, தெம்பனிஸ் சங்காட்டுக்கு மாறியுளளார்.

தொடர்புடைய செய்திகள்

“நாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் நான் திரு பே யாம் கெங்கைத் தெம்பனிஸ் நகர மன்றத் தலைவராக்குவேன். ஏனெனில், அவருக்குத் தெம்பனிஸ் பூலவார்ட் நன்குத் தெரியும். திரு டெஸ்மண்ட் தெம்பனிஸ் சாங்காட்டில் கூடுதல் நேரம், கவனம் செலுத்தலாம்,” என்றார் அமைச்சர் மசகோஸ்.

“கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஏழு புதிய பிடிஓ வீடுகளுக்குப் பொறுப்பேற்றுள்ளேன் - குறிப்பாக, தெம்பனிஸ் பொலிவார்ட் பகுதியில். புதிய மேம்பாடுகளில் எப்போதும் தொடக்கத்தில் சவால்கள் இருக்கும். நான் அமைப்புகளுடன் செயற்குழுச் சந்திப்புகளை நடத்தியுள்ளேன்.

“குடியிருப்பாளர்களுடன் உரையாடி பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டுள்ளேன். அதனால், இந்த அனுபவத்தை நான் நகர மன்றத்துக்கும் கொண்டுவருவேன்,” என்றார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் போக்குவரத்து அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்.

குறிப்புச் சொற்கள்
பொதுத் தேர்தல் 2025GE2025சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு