சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணைய (சிஏஏஎஸ்) தலைமைத்துவத்தில் மாற்றம்

சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணைய (சிஏஏஎஸ்) தலைமைத்துவத்தில் மாற்றம்

2 mins read
50b3d8cf-b960-45b6-bb5e-15da3d75ed80
திரு இங் சீ கெர்ன் (இடது) சிங்கப்பூர் சிவில் விமானத் துறை ஆணையத்தின் தற்போதைய தலைவரான திரு எட்மண்ட் செங்கின் பதவியை ஆகஸ்ட் 1 முதல் ஏற்பார். - படம்: சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலம் உட்பட சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணைய (சிஏஏஎஸ்) நிர்வாகச் சபையில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் அங்கம் வகித்த அதன் தலைவர் எட்மண்ட் செங் அப்பதவியில் இருந்து விலகவிருக்கிறார்.

அவரது பதவியை திரு இங் சீ கெர்ன் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்கிறார்.

திரு இங், சிங்கப்பூர் ஆகாயப் படையில் 2006 முதல் 2009 வரையில் அதன் தலைவராகப் பணியாற்றியவர். மேலும் மனிதவள அமைச்சில் நிரந்தரச் செயலாளராகவும் 2022 முதல் 2025ஆம் ஆண்டுவரை அவர் சேவையாற்றியுள்ளார்.

தலைமைத்துவப் பணிகளில் நீண்ட அனுபவம் நிறைந்த திரு இங்கின் புதிய பதவியேற்பு “உலக அளவில் விமானத்துறை நடுவமாகத் திகழ விழையும் சிங்கப்பூருக்குப் பெருமளவு பலன் அளிக்கும்,” என்று போக்குவரத்து அமைச்சு புதன்கிழமை (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவர் சிஏஏஎஸ் அமைப்பின் துணைத் தலைவராக ஜனவரி 1 முதல் செயல்பட்டு வருகிறார் என்பதையும் அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூர் குடியரசின் விமானப்படையில் 1984ஆம் ஆண்டில் விமானியாகப் பொறுப்பேற்ற திரு இங், பொதுச் சேவைக்கான தங்க விருதை 2016ஆம் ஆண்டில் பெற்றார்.

அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வகித்தவர்

சுகாதார அமைச்சு உட்பட, பிரதமர் அலுவலகத்தில் இயங்கும் அறிவார்ந்த தேசம் 2.0 திட்டம், மின்னிலக்க அரசாங்கக் குழு ஆகியவற்றிலும் அவர் முக்கிய பொறுப்பு வகித்தார்.

தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம் – யூசோப் இஷாக் கல்விக்கழகத்தின் நிர்வாக சபையில் அவர் இயக்குநராகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தற்போது செயலாற்றுகிறார்.

குறிப்புச் சொற்கள்
விமானத்துறைதலைமைத்துவம்பதவி மாற்றம்சாங்கி விமான நிலையம்பொதுப் போக்குவரத்துபோக்குவரத்து அமைச்சு