பசுமை நிலப்பரப்புடன் அமைந்த சமூகவெளிகளுடன், ‘பேர்ல் சிட்டி’ பூங்காவை இயல்பாகவே இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஒன் பேர்ல் பேங்க்’ கூட்டுரிமைக் குடியிருப்பு இவ்வாண்டிற்கான நிலவனப்பு உன்னத மதிப்பீட்டுக் கட்டமைப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
இரு அடுக்குமாடிக் குடியிருப்புகளை இணைக்கும் மாடித் தோட்டம், செங்குத்துப் பூங்காக்கள், இயற்கையான நீர் வடிகால் அமைப்பு, மழைக்காடுகள், சிறுகுளம் என அழகிய, பசுமையான அம்சங்கள் அக்கட்டடத்தில் நிறைந்துள்ளன.
மேலும், சமூக ஒன்றிணைவை ஊக்குவிக்கும் வண்ணம் குடியிருப்பாளர்கள் பயன்படுத்த ஏதுவான தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக்காக இயற்கையுடன் கூடிய நடை மற்றும் ஓடுபாதைகள், அமருமிடங்கள், அனைத்துத் தரப்பினரும் அவற்றைப் பயன்படுத்தும் வண்ணம் ‘பிரைல்’ குறியீடுகள் ஆகியவற்றையும் அக்கட்டடம் உள்ளடக்கியுள்ளது.
நகர்ப்புறத்தைப் பசுமையாக்கிய வணிகக் கட்டடம்
முழுவதுமான நகர்ப்புற வட்டாரத்தில் அமைந்த வணிக அடிப்படையிலான கட்டடத்தை இயற்கையுடன் இயைந்த வகையில் வடிவமைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் ‘பான் பசிபிக் ஹோட்டல்’ தங்கத் தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
காடு, கடற்கரை, பூங்கா, மேகம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வருகையாளர்களுக்கு இயற்கை அனுபவத்தை வழங்கும் வண்ணம் அத்தங்குவிடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயன்ற அளவு சூரிய வெளிச்சம், காற்று ஆகியவற்றைப் பயன்படுத்தும் வகையில் திறந்தவெளிகள், பொழுதுபோக்கு வசதிகள், சூரிய ஒளியை மின்சாரமாக்கும் வசதி ஆகியவை இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. அத்துடன், மழைநீர் முறையாகச் சேகரிக்கப்பட்டு பூங்காக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சிறந்த பூங்காக்களுக்கான சான்றிதழ்
அக்கம்பக்க வட்டாரங்களைப் பசுமையாக்கி, சிங்கப்பூரின் நகர்ப்புற நிலப்பரப்பை இயற்கைக்கு அருகில் இட்டுச்செல்லும் வகையில் அமைந்த 16 பூங்காக்கள், நிலவனப்பு உன்னத மதிப்பீட்டுக் கட்டமைப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளன.
தேசிய பூங்காக் கழகத்தின் சார்பில் வழங்கப்படும் ‘பிளாட்டினம்’ தரச் சான்றிதழை ‘ரெயின் ஃபாரஸ்ட் வைல்டு ஏஷியா’, ‘பிடாடாரி பூங்கா’ ஆகியவை பெற்றுள்ளன. ‘பான் பசிபிக் ஹோட்டல்’ தங்கத் தரச் சான்றிதழைப் பெற்றது.
சாங்கி விமான நிலைய இரண்டாம் முனைய விரிவாக்கம், ‘பொங்கோல் பாயின்ட் கிரவுன்’, ‘ரிவர்வேல் சோர்ஸ்’, மண்டாய் நார்த் தகனச்சாலை, ‘ஒன் பேர்ல் பேங்க்’, ‘ரோச்சஸ்டர் காமன்ஸ்’ ஆகியவை வெள்ளித் தரச் சான்றிதழைப் பெற்றன.
இவற்றுடன், மேலும் ஏழு திட்டங்களுக்கும் அச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அணுகும் தன்மை, பல்லுயிர்ச்சூழல், சமூக மனநலம், ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் அந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்டமைப்பின்கீழ் இதுவரை 119 கட்டுமானத் திட்டங்கள் சான்றிதழ்களைப் பெற்றுள்ளன.