இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து சமூக ஊடகத் தளங்களில் வெளியான விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட மோசடிகளில் குறைந்தது 104 பேர் ஏமாந்து $63,000க்கும் மேல் இழந்துள்ளனர்.
இந்த மோசடிகளில், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் அதிக கழிவு விலையில் பொருள்கள் விளம்பரப்படுத்தப்பட்டன.
குறைவான விலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி அட்டை விவரங்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் ஆகியவற்றைக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தாங்கள் வாங்கிய பொருள்களுக்கு அனுமதியில்லாத பரிவர்த்தனைகள் இடம்பெற்றதை அறிந்த பின்னரே அவர்கள் ஏமாந்திருப்பதை உணர்ந்தனர்.
சில சம்பவங்களில், இந்தப் பரிவர்த்தனைகள் அமெரிக்க, ஹாங்காங் அல்லது ஆஸ்திரேலிய டாலரில் செய்யப்பட்டன.
இத்தகைய குற்றச்செயல்கள் குறித்து தகவல் அறிந்திருப்போர் 1800-255-0000 என்ற காவல்துறைத் தொடர்பு எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணைய முகவரியில் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
பொதுமக்கள் www.scamalert.sg என்ற இணையத்தளத்தையும் நாடலாம்.
மோசடிகள் குறித்த மேல்விவரங்களை அறிய, அவர்கள் 1800-722-6688 என்ற எண்ணில் மோசடி எதிர்ப்பு உதவிச்சேவையையும் தொடர்புகொள்ளலாம்.